ஜனநாயகத்தை தி.மு.க.,வா காப்பாற்றப் போகிறது: ஸ்மிருதி இரானி காட்டம்
"கலாசாரமும் பக்தியும் நிறைந்த பூமி இது. சனாதனத்தை எதிர்க்கிறோம் என தி.மு.க., கூறியபோது நாடே கொந்தளித்தது" என, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
வடசென்னை பா.ஜ., வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்ட பிறகும், 'மோடி தான் பிரதமர்' என்று சொல்ல முடியும். இண்டியா கூட்டணியில், 'யார் பிரதமர் வேட்பாளர்?' என்று அவர்களால் கூற முடியுமா.
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரே அஜெண்டா, வளர்ச்சியடைந்த தேசத்தைக் கொண்டு வர வேண்டும் என்பது தான். இண்டியா கூட்டணிக்கு என்ன அஜெண்டா இருக்கிறது என்று அவர்களால் சொல்ல முடியுமா.
நாட்டை சூறையாடுவதற்கு மட்டுமே அவர்கள் இருக்கிறார்கள். நான் கேரளாவில் பிரசாரம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு வயநாட்டில் ராகுலை எதிர்த்து நிற்கும் பா.ஜ., வேட்பாளருக்காக பிரசாரம் செய்வதற்காக சென்றபோது ஒன்றை கவனித்தேன்.
அங்கு இண்டி கூட்டணியினர் கட்டித் தழுவிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், டில்லியில் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். கலாசாரமும் பக்தியும் நிறைந்த பூமி இது. சனாதனத்தை எதிர்க்கிறோம் என தி.மு.க., கூறியபோது நாடே கொந்தளித்தது.
'ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் தேர்தலில் நிற்கிறோம்' என காங்கிரஸ் கூறுகிறது. தி.மு.க.,வை கூட்டணியில் வைத்துக் கொண்டு அவர்களால் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியுமா. அம்பேத்கரின் அரசியல் சாசனத்தையே எரித்தவர்கள் தானே தி.மு.க.,வினர்?
பா.ஜ., மீண்டும் வந்தால் நாடே பற்றி எரியும் என காங்கிரஸ் கூறுகிறது. இப்படிக் கூறுபவர்களால் நாட்டை எப்படி காப்பாற்ற முடியும். தேர்தலை சந்திப்பதற்கு கூட பி.எப்.ஐ போன்ற தீவிரவாத அமைப்புகளின் துணையோடு காங்கிரஸ் செயல்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு 1 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாயை மோடி அரசு தமிழகத்துக்குக் கொடுத்துள்ளது. காங்கிரசின் ஆட்சியில் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்று சொல்ல முடியுமா?
இங்கிருக்கும் தொண்டர்களையும் மக்களையும் நான் கேட்டுக் கொள்வது ஒன்று தான். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க வேண்டும் என்றால் தாமரைக்கு ஓட்டுப் போடுங்கள். உங்கள் குடும்பத்துக்காக இந்த தேர்தலில் வாக்களியுங்கள். அவர்கள் குடும்பத்துக்காக அல்ல.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து