வெளியேறிய சிம்லா உள்ளே வந்த ஜான்சி
திருநெல்வேலி அ.தி.மு.க., வேட்பாளர் நேற்று திடீரென மாற்றப்பட்டார்.
தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளில், அ.தி.மு.க., 32 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் ஏழு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியலை இரண்டு கட்டமாக, பொதுச்செயலர் பழனிசாமி வெளியிட்டார்.
திருநெல்வேலி தொகுதி வேட்பாளராக, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சிம்லா முத்துச்சோழன் நிறுத்தப்பட்டார். இது, கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஏனெனில், இவர் ஆர்.கே.நகர்., சட்டசபை தொகுதியில், ஜெயலலிதாவை எதிர்த்து, தி.மு.க., சார்பில் போட்டியிட்டவர். சமீபத்தில் தான், தி.மு.க.,விலிருந்து விலகி அ.தி.மு.க.,வில் இணைந்தார்.
அ.தி.மு.க., அறிவித்த 32 வேட்பாளர்களில், சிம்லா முத்துச்சோழன் மட்டுமே பெண் வேட்பாளர். அ.தி.மு.க.,வில் தகுதியான ஒரு பெண்ணுக்கு கூட வாய்ப்பு வழங்காமல், ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவருக்கு வாய்ப்பு வழங்கலாமா என்ற புகார் கிளம்பியது.
இந்தச் சூழ்நிலையில், சிம்லா முத்துச்சோழனுக்கும், திருநெல்வேலி தொகுதி பொறுப்பாளரான மாவட்ட செயலருக்கும் இடையே, பண விஷயத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, பழனிசாமியிடம் மாவட்ட செயலர் புகார் தெரிவித்துள்ளார். மேலும், சிம்லாவை வேட்பாளராக போட்டதால், கட்சியினர் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறியுள்ளார். அதற்கு பதில் அளித்த சிம்லா முத்துச்சோழன், சம்பந்தப்பட்ட மாவட்ட செயலர், அத்தொகுதி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு ஆதரவாக செயல்படுகிறார் என, புகார் தெரிவித்துள்ளார்.
ஆரம்பமே மோதல் என்றதும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, வேட்பாளரை மாற்ற முடிவு செய்துள்ளார். அதன்படி திருநெல்வேலி வேட்பாளராக, சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக, திருநெல்வேலி புறநகர் மாவட்ட இணை செயலரும், திசையன்விளை பேரூராட்சி தலைவருமான ஜான்சிராணி, அ.தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஒரே ஒரு பெண் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, கடைசியில் மாற்றப்பட்டது, சிம்லா முத்துச்சோழனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து