காமராஜருக்குப் பின் வந்தவர்கள் கவனிக்கவில்லை: அண்ணாமலை பேச்சு
"இங்குள்ள எம்.பி.,க்கள் பார்லிமென்டில் மவுன விரதத்தை காட்டிவிட்டு வந்திருக்கின்றனர். மக்களின் பிரச்னைகளைப் பற்றி அவர்கள் வாய் திறக்கவில்லை" என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவையில் நடந்த பிரசார கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:
பிரதமர் மோடியின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சி, ஏழைகளை மையமாக வைத்தே நடந்தது. கடந்த 50 ஆண்டுகளில் விவசாயிகளுக்காக ஓர் ஆட்சி நடந்திருக்கும் என்றால் அது பா.ஜ., ஆட்சியில் மட்டும் தான்.
தமிழகத்தில் 45 லட்சம் விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கு, இளைஞர்களுக்கான தொழில் மற்றும் வேலைவாய்ப்புஎன பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு கொடுத்தாலும் அது குரங்கு கையில் பூ மாலை என்பது போல தி.மு.க., செயல்படுகிறது. சாதாரண ஏழையாக பிறந்து வளர்ந்தவர் மோடி. ஸ்டாலின் போல தங்கத் தட்டில் பிறந்தவர் அல்ல.
நானும் கஷ்டப்பட்டுத் தான் படித்து வளர்ந்தேன். விசைத்தறி பிரச்னைக்கு நிரந்தர தீர்வை பா.ஜ., அரசால் மட்டுமே கொடுக்க முடியும். அடுத்த வருடத்திற்குள் விசைத்தறி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்.
விசைத்தறி நெசவாளர்களின் பிரச்னையைத் தீர்க்க சோமனுாரில் ஜவுளி பூங்காவை உருவாக்க வேண்டும். இதற்கான மின்சாரத்தை சோலார் பேனல் வாயிலாக ஏற்படுத்த வேண்டும். இந்தத் திட்டத்திற்கு 75 சதவீதம் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இங்குள்ள எம்.பி.,க்கள் பார்லிமென்டில் மவுன விரதத்தை காட்டிவிட்டு வந்திருக்கின்றனர். மக்களின் பிரச்னைகளைப் பற்றி அவர்கள் வாய் திறக்கவில்லை.
காமராஜர் காலத்துக்கு பின் ஆட்சிக்கு வந்தவர்கள் விவசாயத்தை மறந்துவிட்டனர், அவர் 14 அணைகளைக் கட்டித் தந்தார். நீர் மேலாண்மை இல்லாததால் மாநிலமே வறட்சியாக மாறிவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து