வேட்பாளரை மாற்றிய கொ.ம.தே.க., : கண்கலங்கிய சூரியமூர்த்தி
நாமக்கல் லோக்சபா தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சூர்யமூர்த்திக்கு பதிலாக மாதேஸ்வரன் போட்டியிட உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
தி.மு.க., கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டது. இக்கட்சியின் சார்பில் வேட்பாளராக சூரியமூர்த்தியின் பெயர் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், 2008ம் ஆண்டு பட்டியலின சமூகம் குறித்து சூரியமூர்த்தி பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
'தலித் மக்களைப் பற்றி அவதூறாக பேசிய சூரியமூர்த்திக்கு வாய்ப்பு கொடுக்ககக் கூடாது' என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதற்கு பதில் அளித்த கொ.ம.தே.க., பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன், "வீடியோவை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்க எடுக்கப்படும்" என்றார்.
தவிர, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சூரியமூர்த்தியை நாமக்கல் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில், உள்ளூர் நிர்வாகிகளும் அதிருப்தியில் இருந்தனர்.
இந்நிலையில், சூரியமூர்த்திக்கு பதிலாக கொ.ம.தே.க.,வின் நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளராக இருக்கும் வி.எஸ்.மாதேஸ்வரனுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இதனை கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அறிவித்தபோது, சூரியமூர்த்தி கண்கலங்கினார். 'அவருக்கு வேறு ஒரு சந்தர்ப்பத்தில் வாய்ப்பு வழங்கப்படும்' என கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவில் இந்த மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியானது. விவசாயம் செய்து வரும் மாதேஸ்வரன், 2016 சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
வாசகர் கருத்து