'வ ன்னியர்களுக்கு, 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு என்பது தற்காலிகமானது தான்' என, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., தெரிவித்த கருத்து, தென் மாவட்டங்களில் கோபத்தில் இருந்த, முக்குலத்தோர் சமுதாய மக்களை சற்று சாந்தப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், வன்னியர்களுக்கு, 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டம், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. பின், அ.தி.மு.க., - பா.ம.க., கூட்டணி உறுதி செய்யப்பட்டது. வன்னியர் சமுதாயத்திற்கு மட்டும் உள் ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டதால், தென் மாவட்டங்களில் அதிருப்தி அடைந்த முக்குலத்தோர் சமுதாயம், அ.ம.மு.க.,வுக்கு ஆதரவு அளிக்கப் போவதாக பேச்சு அடிபட்டது.
இந்நிலையில், அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, 'ஆன்மிக' பயணம் என்ற பெயரில், தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்கிறார். திரைமறைவில், அ.ம.மு.க.,
வேட்பாளர்களையும் சந்தித்து பேசி நலத்திட்ட உதவி வழங்குகிறார். இதை அறிந்ததும், தென் மாவட்டங்களில் அரசியல் செய்யும் முக்குலத்தோர் சமுதாய அமைச்சர்களும், வேட்பாளர்களும் கலக்கம் அடைந்தனர். அதையடுத்து, 'வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு சட்டம் தற்காலிகமானது தான் என்று, ஓ.பி.எஸ்., பேட்டி அளித்தார்.
சமுதாய மக்களை சாந்தப்படுத்தவும், அ.ம.மு.க., பக்கம் சாயாமல் தடுக்கவும், இந்த பேட்டியை, வலிய சென்று து.மு., அளித்ததாக, அ.ம.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், வன்னியர் உள் ஒதுக்கீடு சட்டம் தற்காலிகம் அல்ல; நிரந்தரமானது என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மறுப்பு வெளியிட்டுள்ளார். இரு தரப்பு மோதலை, மும்முனை மோதலாக மாற்றியது தான்
மிச்சம்.
வாசகர் கருத்து