பா.ம.க., வேட்பாளர் பட்டியல்: அன்புமணி பின்வாங்கியது ஏன்?
லோக்சபா தேர்தலில் பா.ம.க., சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சி வெளியிட்டுள்ளது. இதில், கடலூரில் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் போட்டியிட உள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரத்துக்கு குறைவான நாள்களே இருப்பதால், வேட்பாளர்களை அறிவிப்பதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
அந்தவகையில், பா.ஜ., கூட்டணியில் 10 தொகுதிகளைப் பெற்ற பா.ம.க., இன்று 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் (தனி) தொகுதிக்கான வேட்பாளர் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
திண்டுக்கல் - ம.திலகபாமா, அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு, ஆரணி - அ.கணேஷ் குமார், கடலூர் - தங்கர் பச்சான், மயிலாடுதுறை - ம.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சி - இரா. தேவதாஸ், தருமபுரி - அரசாங்கம், சேலம் - ந. அண்ணாதுரை, விழுப்புரம் - முரளி சங்கர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
லோக்சபா தேர்தலில் அன்புமணி களமிறங்காதது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தேர்தலில் தருமபுரியில் போட்டியிட்ட அன்புமணி, தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமாரிடம் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
தற்போது ராஜ்யசபா உறுப்பினராக இருக்கும் அன்புமணி, பா.ஜ., உடனான கூட்டணிப் பேச்சில் ராஜ்யசபா உறுப்பினர் பதவியை எதிர்பார்த்தார். அதுகுறித்த எந்த வாக்குறுதியும் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்தாகவில்லை. இவரது ராஜ்யசபா பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் நிறைவடைகிறது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பா.ம.க.,வின் ராஜ்யசபா கோரிக்கை நிறைவேறலாம் என்பதால், இம்முறை அன்புமணி நேரடியாக களமிறங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
தொடக்கத்தில் இருந்தே திரையுலக பிரபலங்களை சாடி வரும் பா.ம.க., தற்போது கடலூர் தொகுதியில் போட்டியிட இயக்குநர் தங்கர்பச்சானுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.
வாசகர் கருத்து