பரவும் சர்ச்சை ஜாதி வீடியோ: நாமக்கல்லில் சூரியமூர்த்தி சறுக்கல்
தி.மு.க., கூட்டணியில் கொ.ம.தே.க., மீண்டும் நாமக்கல்லில் போட்டியிடுகிறது. சிட்டிங் எம்.பி., சின்ராஜ், மீண்டும் போட்டியிட மறுத்ததால், மாநில இளைஞரணி செயலர் சூரியமூர்த்தியை வேட்பாளராக அறிவித்தார் பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன்.
ஈரோடில் கடந்த, 18ல் வேட்பாளரை அறிவித்த சில நிமிடங்களில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை கடுமையாக விமர்சித்து சூரியமூர்த்தி பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.
அந்த வீடியோவை பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து, எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசனும் தன் பேஸ்புக் பக்கத்தில் சூரியமூர்த்திக்கான எதிர்ப்பு பதிவைப் பகிர்ந்து, 'இந்தக் கேள்விக்கு என்ன பதில்?'எனக் கேட்டுள்ளார்.
இந்த வீடியோவால் அதிர்ச்சி அடைந்த, தி.மு.க., - வி.சி., - தமிழ்ப் புலிகள் அமைப்பினர் உட்பட, தி.மு.க.,வுடன் உறவில் உள்ளவர்கள், நேரடியாக தங்கள் எதிர்ப்பை பதிவிடுகின்றனர்.
நாமக்கல் மாவட்ட கொ.ம.தே.க., மற்றும் தி.மு.க., நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, 'எங்கள் பகுதிக்குள் சூரியமூர்த்தியை கூட்டிவந்து ஓட்டு கேட்கக்கூடாது. மீறி வந்தால் நடக்கும் விபரீதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல' என கொந்தளித்துள்ளனர்.
தி.மு.க., நிர்வாகிகள் இதுபற்றி, தலைமைக்கே தெரிவித்து, 'வேட்பு மனுத்தாக்கலுக்கு அவகாசம் உள்ளது. எனவே, கொ.ம.தே.க., நிர்வாகிகளிடம் பேச வேண்டும். அல்லது வெற்றி, தோல்வி, ஓட்டு வித்தியாசத்துக்காக, தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை குறை கூறக்கூடாது' என தகவல் கூறி உள்ளனர்.
வேட்பு மனு தாக்கலுக்கு முன்பே, 'நாமக்கல் நமக்கில்லை' என்ற கோஷம், நாலாபுறமும் கேட்கத் துவங்கி விட்டது.
இந்நிலையில், வேட்பாளர் சூரியமூர்த்தி இதற்குப் பதிலளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'எதிர்க்கட்சியினர் காணொலி மூலம் பொய்யான, மலிவான பிரசாரத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
அக்காணொலி, அது தவறான காணொலி. பொய்யானதென்று, 2018ல் ஈரோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, 2021ல் உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் களத்தில் எதிர்கொள்ள முடியாத எதிர்க்கட்சியினர், பொய் காணொலி பிரசாரத்தை மேற்கொள்கின்றனர். அதை பதிவிடுவோர், பகிர்வோர் மீதும் நடவடிக்கை மேற்கொள்வோம்' என தெரிவித்துள்ளார்.
கட்சிக்குள்ளும் அதிருப்தி
நாமக்கல் கொ.ம.தே.க., வேட்பாளராக, சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டது, கட்சிக்குள்ளேயும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், சூரியமூர்த்தி, ஈரோடு மாவட்டம், சிவகிரியை சேர்ந்தவர். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிக்கு வாய்ப்பு அளிக்காமல், வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து