வெளியேறினார் சூரியமூர்த்தி: உள்ளே வந்தார் மாதேஸ்வரன்

ஜாதி ரீதியான பேச்சு, வேட்பாளரை தி.மு.க., விரும்பாதது, நாமக்கல் தொகுதியினர் எதிர்ப்பால், கொ.ம.தே.க., வேட்பாளர் மாற்றப்பட்டு உள்ளார்.

இது பற்றி, கொ.ம.தே.க., நிர்வாகிகள் கூறியதாவது:

லோக்சபா தேர்தல் ஆரம்ப கட்டத்திலேயே, தி.மு.க., கூட்டணியில் நாமக்கல் கிடைத்தால், அம்மாவட்ட நிர்வாகியையும்; ஈரோடு, பொள்ளாச்சி கிடைத்தால், சம்பந்தப்பட்ட மாவட்டத்தைச் சேர்ந்த சூரியமூர்த்தி, கே.கே.சி.பாலு உட்பட சில நிர்வாகிகளையும் நிறுத்தலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தனக்கு வாய்ப்பு தர வேண்டும் என சூரியமூர்த்தி அழுத்தம் கொடுத்ததாலும், கட்சி பாதுகாப்பு கருதியும் அவரையே, நாமக்கல் வேட்பாளராக நிறுத்தினர்.

ஈஸ்வரன், கே.கே.சி.பாலு போன்றோருக்கு, சூரியமூர்த்தியை நிறுத்தியதில் விருப்பம் இல்லை. உளவுத்துறை அறிக்கையின்படி, தி.மு.க., தலைமை, கொ.ம.தே.க.,விடம் பேசி, வேட்பாளரை மாற்றக் கோரியது.

அதே நேரத்தில் சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில், அவர் பேசிய ஜாதிய ரீதியிலான வீடியோ, அவரது பிற பேச்சுகள், சில இடங்களில் நடந்த சம்பவங்களை வீடியோ, போட்டோக்களாக வெளியிட்டு, பலரும் கண்டனம் தெரிவித்தனர். தி.மு.க., சின்னத்தில் அவர் போட்டியிட எதிர்ப்பும்கிளம்பியது.

தங்கள் பகுதிக்குள் வரக்கூடாது என்றும், தி.மு.க., ஒதுங்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் கருத்து பதிவிட்டனர்.

பகுஜன் சமாஜ் கட்சி உட்பட பல தலித் அமைப்புகள், தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பின. தவிர, 'நேஷனல் கமிஷன் பார் ஷெட்யூல் காஸ்ட்'டில் இருந்தும் சூரியமூர்த்தியின் சொந்த மாவட்டமான, ஈரோடு கலெக்டர், எஸ்.பி.,க்கும் இது பற்றி விசாரிக்க கடிதம் அனுப்பப்பட்டது.

இதையறிந்த தி.மு.க., தலைமை, 'வேட்பு மனு பரிசீலனையில் பிரச்னை எழுந்தாலோ அல்லது எவரேனும் நீதிமன்றம் சென்றாலோ மனு தள்ளுபடியாகும் நிலை உருவாகும். தி.மு.க., கூட்டணி கட்சி ஒரு தொகுதியில் போட்டியிடவில்லை என்ற நிலை ஏற்படும். எனவே வேட்பாளரை மாற்றுங்கள்' என அறிவுரை வழங்கியது.

இதனால், சூரியமூர்த்தியை மாற்றிவிட்டு, மாதேஸ்வரனை அறிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு கூறினர்.

இதற்கிடையில், நாமக்கல் மாவட்ட தி.மு.க., பிரமுகர் ஒருவர் தான், வேட்பாளர் மாற்றத்தின் பின்னணியில் இருந்ததாகவும், சூரியமூர்த்தி வெற்றி பெற்றால் தன் கட்டுப்பாட்டில் இருக்க மாட்டார் என்பதாலும், அவர் இந்த அரசியலில் ஈடுபட்டார் என்றும் தகவல் வெளியாகிஉள்ளது.

இழுக்கிறது

அ.தி.மு.க.,

அதிருப்தியில் உள்ள சூரியமூர்த்தியை அ.தி.மு.க.,விற்கு அழைத்து வரும் முயற்சியில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர்கள் இருவர் ஈடுபட்டுள்ளனர். சூரியமூர்த்தியை அ.தி.மு.க.,வுக்கு இழுப்பதால், கவுண்டர் சமுதாய ஓட்டுகள் அ.தி.மு.க.,விற்கு கூடுதலாக கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

முதல்வர்பச்சைக்கொடி

நேற்று முன்தினம் இரவு, நாமக்கல் கொ.ம.தே.க., அலுவலகத்தில் ஆட்சி மன்ற கூட்டம் நடந்தது.

இதில், சூரியமூர்த்திக்கு பதிலாக மாதேஸ்வரன் வேட்பாளராக களம் இறக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, பொதுச்செயலர் ஈஸ்வரன், தி.மு.க., மாவட்ட செயலர் ராஜேஸ்குமார் எம்.பி., ஆகியோர் இரவு 9:00 மணியளவில் முதல்வர் ஸ்டாலினிடம் இது குறித்து தகவல் தெரிவித்தனர். பின், வேட்பாளர் மாற்றத்திற்கு முதல்வர் ஒப்பதல் அளித்ததை தொடர்ந்து, மாதேஸ்வரன் வேட்பாளராகஅறிவிக்கப்பட்டார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)