Advertisement

ஸ்டாலின் ஆவேசம் : நெல்லைக்கு வேட்பாளரை அறிவித்த காங்கிரஸ்

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்ய உள்ள நிலையில், அத்தொகுதிக்கான வேட்பாளரை அவசரம் அவசரமாக காங்., அறிவித்துள்ளது. "வேட்பாளர் அறிவிப்பின் பின்னணியில் முதல்வரின் கோபம் உள்ளது" என, தி.மு.க., நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல், பிரசாரம் என அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. தி.மு.க., கூட்டணியில் காங்கிரசை தவிர இதர கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.

காங்கிரசில் வேட்பாளர் தேர்வு, பிரசாரம் உள்ளிட்ட பணிகளுக்காக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு, தொகுதிக்கு 3 பேர் என பட்டியலை தயார் செய்து டெல்லிக்கு அனுப்பியது.

ஆனால், வேட்பாளர்களை இறுதி செய்வதில் இழுபறி ஏற்பட்டது. நேற்று முன்தினம் வெளியான பட்டியலில் தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் ஒன்பது தொகுதிகளுக்கு 7க்கு மட்டுமே வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டது.

இதில், திருவள்ளூர் தொகுதியில் முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரியில் கே.கோபிநாத், கரூரில் ஜோதிமணி, கடலூரில் விஷ்ணுபிரசாத், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரியில் விஜய் வசந்த் ஆகியோர் போட்டியிட உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இந்தப் பட்டியலின்படி, சிட்டிங் எம்.பி.,க்கள் ஐந்து பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேநோம், திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கும் விளவங்கோடு தொகுதிக்கும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை.

இன்று நெல்லை, கன்னியாகுமரியில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இன்னும் காங்கிரஸ் தரப்பில் வேட்பாளரை அறிவிக்காமல் தாமதம் செய்ததால், ஸ்டாலின் தரப்பில் இருந்து காங்கிரஸ் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். "இன்று நெல்லையில் முதல்வர் பிரசாரம் செய்ய இருக்கிறார். எப்போது தான் வேட்பாளரை அறிவிப்பீர்கள்?" என கோபமாக கேட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, நெல்லை தொகுதியில் ராபர்ட் புரூஸ் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். விளவங்கோடு இடைத்தேர்தலில் தாரகை கத்பர்ட் என்பவரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் யாருக்கு வாய்ப்பு என்ற விவரம் வெளியாகவில்லை.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்