வாய்க்கொழுப்பால் சிக்கிய அமைச்சர்: வேட்பாளரை மாற்ற சத்திரியர்கள் குரல்
குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அங்கு மொத்தமுள்ள, 26 லோக்சபா தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக, மே 7ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரது சொந்த மாநிலமான குஜராத், நீண்ட காலமாகவே, பா.ஜ.,வின் கோட்டை தான்.
குஜராத்தின் ராஜ்கோட் தொகுதியில், ராஜ்யசபா எம்.பி.,யும், மத்திய மீன்வளத் துறை அமைச்சருமான புருஷோத்தம் ரூபாலா, பா.ஜ., வேட்பாளராக களமிறக்கப்பட்டு உள்ளார்.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய மீன்வளத் துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா, 'கீழ் ஜாதியினரை போலல்லாமல், ஆங்கிலேயர்களிடம் மன்னர்கள் அடிபணிந்தனர்.
மன்னர் குடும்பத்துக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையே திருமண உறவு இருந்தது' என்றார். இதனால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில், ராஜ்கோட் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ரூபாலாவை மாற்றக் கோரி, அங்கு அதிக அளவில் வசிக்கும் சத்திரிய சமூகத்தினர் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் பூதாகாரமாக வெடித்ததை அடுத்து, சத்திரியர்களுடன், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மாநில பா.ஜ., தலைவர் சி.ஆர்.பாட்டீல் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். எனினும் வேறொரு வேட்பாளரை நிறுத்த வேண்டும் என கறாராக தெரிவித்து விட்டனர்.
குஜராத்தில் செல்வாக்கு மிக்கவர்களாக சத்திரியர்கள் உள்ளனர். ராஜபுத்திரர்கள் என்றும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர். சரித்திர காலத்தில், குஜராத்தின் பெரும்பான்மையான பகுதிகளில், இந்த சமூகத்தினரே ஆட்சி செய்து வந்தனர். இவர்களிடம் நிலங்களும் அதிக அளவில் உள்ளன. மாநிலத்தின் மொத்த வாக்காளர்களில், இவர்களின் பங்கு, 7 சதவீதம். அதனால் இவர்களின் குரலுக்கு மாநிலத்தில் மதிப்பு அதிகம்.
வாசகர் கருத்து