Advertisement

செத்தாலும் தனிச் சின்னம் தான்... புண்படுத்த வேண்டாம் : கண்கலங்கிய துரை வைகோ

"நீங்கள் யாரை வேண்டுமானாலும் நிறுத்துங்கள். அவர்களுக்காக வேலை பார்க்கிறோம். திராவிடர் கழகம் போல எங்கள் கட்சியை நடத்திவிட்டு போகிறோம்" என, ம.தி.மு.க., வேட்பாளர் துரை வைகோ பேசினார்.

தி.மு.க., கூட்டணியின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் துரை வைகோ பேசியதாவது:

தி.மு.க.,வுக்கு சிவனும் சக்தியாக இருக்கும் நேருவை சுற்றி வந்து கொண்டிருக்கிறேன். அவரிடம் தனியாக பேசும்போதுகூட, 'உங்கள் மகன் போல நினைத்துக் கொள்ளுங்கள்' என்றேன். நான் அரசியலுக்கு வருவேன் எனக் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.

அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், அரசியலுக்கு வந்தேன். என் அப்பாவுக்கு தலைகுனிவு வந்துவிடக் கூடாது என்பதற்காக போட்டியிடுகிறேன். இப்போதும் நான் பெரிய வேட்கையுடன் அரசியல் ஆசையுடன் இருக்கிறேனா என்றால் கிடையவே கிடையாது. உண்மையாகவே சொல்கிறேன்.

இப்போதும், தேர்தலில் நிற்கிறேன் என்று சொல்லவில்லை. வேறு யாரை நிறுத்தினாலும் தேர்தல் வேலை பார்க்கிறேன் என்று தான் சொன்னேன். ஏனென்றால், என் கட்சிக்காகவும் அப்பாவுக்காகவும் 30 வருடங்கள் உழைத்து எங்கள் கட்சிக்காரர்கள் தேய்ந்துவிட்டார்கள். (அழுகிறார்)

என்னுடைய விருப்பம் என்று எதுவும் இல்லாமல் தான் தேர்தலில் போட்டியிடுகிறேன். அண்ணாவின் கட்சி தி.மு.க, கருணாநிதியின் கட்சி தி.மு.க, என் அப்பாவும் தி.மு.க.,வில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். உதயசூரியன் சின்னத்தை மதிக்கிறோம். அதற்காக, கட்சி பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு இன்னொரு சின்னத்தில் நிற்க வாய்ப்பில்லை. செத்தாலும் தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம்.

நீங்கள் வேறு யாரை வேண்டுமானாலும் நிறுத்துங்கள். அவர்களுக்காக வேலை பார்க்கிறோம். திராவிடர் கழகம் போல எங்கள் கட்சியை நடத்திவிட்டு போகிறோம்.

திராவிட கட்சிகளை அழித்துவிட்டு மதவாத சக்திகள் காலூன்ற நினைக்கின்றன. அதற்கு ஒரு வாய்ப்பு வந்துவிடக் கூடாது என்பதால் அனைவரும் இணைந்து நிற்கிறோம். நாங்கள் சின்ன கட்சி தான். பெரிய சக்தி கிடையாது.

இந்த காலகட்டத்தில் எங்களை புண்படுத்த வேண்டாம். சீட் கொடுக்காவிட்டாலும் கூட 40 தொகுதிகளிலும் வேலை பார்க்கிறோம். தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என்பதற்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு துரை வைகோ பேசினார்.

முன்னதாக, 'தனிச்சின்னத்தில் போட்டியிடுவதைவிடவும் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க., போட்டியிடலாமே?' என்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, துரை வைகோ தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை கண்கலங்க விவரித்தார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்