பொன்முடி மகனுக்கு 'சீட்' கொடுக்காதது ஏன்?
கள்ளக்குறிச்சி தொகுதியில் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணிக்கு மீண்டும் சீட் வழங்காதது ஏன் என்பது குறித்த பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி தொகுதியின் சிட்டிங் எம்.பி.,யாக, முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி உள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில், பொன்முடி தனது செல்வாக்கை பயன்படுத்தி, கவுதம சிகாமணிக்கு சீட் பெற்று தந்ததுடன், களத்தில் இறங்கி பணியாற்றி வெற்றியும் பெற வைத்தார்.
கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பின், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக வேலு நியமிக்கப்பட்டார். மாவட்டத்தில் வேலுவின் தலையீடு காரணமாக, பொன்முடியின் செல்வாக்கு கள்ளக்குறிச்சியில் சரியத் துவங்கியது.
மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க., செயலர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர், மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான வேலுவின் ஆதரவாளர்களாக மாறினர். எதிர்கோஷ்டிகள் தலைதுாக்கியதால், கவுதம சிகாமணியால் தொகுதியில் கோலோச்ச முடியவில்லை.
சொந்த கட்சியினரே எதிராக திரும்பியதால் 'மூட் அவுட்' ஆன கவுதம சிகாமணி, கள்ளக்குறிச்சி தொகுதியில் மீண்டும் போட்டியிட வேண்டாம் என, ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு எடுத்து விட்டார். இதனால், விருப்ப மனு அளிக்கக்கூட முன் வரவில்லை.
முதல்வர் குடும்பத்தை சேர்ந்த சிலரின் அறிவுறுத்தலின் பேரில், விருப்பம் இல்லாமல் கடைசி நேரத்தில் விருப்ப மனு அளித்தார்.
கவுதம சிகாமணி மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான அமலாக்கத் துறை வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், செம்மண் குவாரி தொடர்பான வழக்கும் விசாரணையில் உள்ளது.
இதன் காரணமாகவும், கவுதம சிகாமணிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் சிக்கலை ஏற்படுத்துமோ என கருதிய கட்சி தலைமை சீட் தரவில்லை என தெரிகிறது. கவுதம சிகாமணிக்கு சீட் வழங்கப்படாதது, பொன்முடியின் ஆதரவாளர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து