ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி- மஸ்தான் குஸ்தி
விழுப்புரத்தில் நடந்த ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், அமைச்சர் மஸ்தானை முறைத்த பொன்முடி, அவரிடமிருந்து மைக்கை பிடுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் நேற்று மாலை, நடந்த ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு, தி.மு.க., வடக்கு மாவட்ட செயலர் அமைச்சர் மஸ்தான் முன்பே வந்து அமர்ந்திருந்தார். பொன்முடி வர தாமதமானதால், அமைச்சர் மஸ்தான் பேசினார்.
சிறிது நேரத்தில் வந்த பொன்முடி, 'முன்னாடியே வந்திட்டியா... நீ பேசியது போதும்' என, கடிந்த முகத்துடன், அமைச்சர் மஸ்தானிடமிருந்து மைக்கை பிடுங்கி பேசினார்.
இதனால் கடுப்பான அமைச்சர் மஸ்தான், 'நான் பேசி முடிக்கவில்லை' எனக்கூறி, மைக்கை கேட்டபடி கையை நீட்டினார். ஆனால், அமைச்சர் பொன்முடி, 'போதும் உட்காரு' என கூறிவிட்டு, அவர் பேசினார்.
இதனால், கோபத்துடன் அமர்ந்திருந்த மஸ்தான், நோன்பு திறக்கப்பட்டு, கஞ்சி சாப்பிட்டதும், நிகழ்ச்சியின் பாதியிலேயே எழுந்து வெளியேறினார். அப்போது, 'நாய் வாலை நிமித்தவும் முடியாது; பொன்முடியை திருத்தவும் முடியாது' என, வேட்பாளர் ரவிகுமாரிடம் கடிந்து பேசியபடி மஸ்தான் காரில் ஏறி புறப்பட்டதாக கட்சியினர் கூறினர்.
இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தால், வி.சி., வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
வாசகர் கருத்து