தேர்தல் கமிஷனின் புது தொழில்நுட்பம்: தி.மு.க., அச்சப்படுவது ஏன்?
"விவிபேடில் எஸ்.எல்.யூ என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை தயாரிக்கும் பணியில் பா.ஜ.,வினரை நியமித்துள்ளனர்" என, தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
சென்னையில் தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் சட்டத்துறை செயலர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
தேர்தலில் புதிய ஷரத் ஒன்றை தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தியுள்ளது. வாக்குப் பதிவு இயந்திரங்களில் முதல் ஜெனரேசன், இரண்டாம் ஜெனரேசன் என இருந்தது. தற்போது 3ம் தலைமுறையை (Generation) அறிமுகப்படுத்தியுள்ளனர்.
முன்பெல்லாம் ஓட்டு போட்டவுடன் அது வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும். பின், விவிபேடில் தான் யாருக்கு ஓட்டுப் போட்டோம் என்பதை வாக்காளரால் உறுதி செய்து கொள்ள முடியும்.
தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய நடைமுறையில், வாக்காளர் செலுத்தும் ஒட்டு விவிபேடில் உறுதி செய்த பின்னர், வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஓட்டு பதிவாகும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இது தேர்தல் கமிஷன் விதி 49(D)க்கு எதிரானது என தேர்தல் கமிஷனின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.
இதுகுறித்து வழக்கும் தொடர்ந்துள்ளோம். தவிர, விவிபேடில் எஸ்.எல்.யூ என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை தயாரிக்கும் பணியில் பா.ஜ.,வினரை நியமித்துள்ளனர்.
இதனை வெறும் 479 இயந்திரங்களில் மட்டுமே சோதனை செய்துள்ளனர். அதிலும் 2 சதவீத கோளாறு ஏற்பட்டதாக தேர்தல் கமிஷன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஒரு தொகுதிக்கு 2 சதவீதம் என்றால் அது வேட்பாளரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும்.
வாக்குப் பதிவின் போது ஒப்புகைச் சீட்டு வழங்குவதில் குறைபாடுகள் உள்ளன. இதன் காரணமாக, வாக்குப் பதிவு இயந்திரங்களில் கடந்தமுறை செயல்படுத்தப்பட்ட நடைமுறையே, இந்தமுறையும் பின்பற்றப்பட வேண்டும்.
வாக்குப் பதிவு இயந்திரம் மீதான சந்தேகத்தை தெளிவுபடுத்த வேண்டிய கடமை தேர்தல் கமிஷனுக்கு உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து