முதல்வர் கூட்டத்தை புறக்கணித்த: 'சிட்டிங்' சிகாமணி 'சீட்' கிடைக்காத அதிருப்தி
விழுப்புரத்தை சேர்ந்த, தி.மு.க., அமைச்சர் பொன்முடி மகன் கவுதமசிகாமணி. இவர், கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இத்தேர்தலில் விருப்ப மனு அளிக்க கட்சி தலைமை கூறியபோது, 'சிட்டிங்' எம்.பி., கவுதமசிகாமணி, கடைசி நேரத்தில் விருப்ப மனு செய்தார். அவரது ஆதரவாளர்கள், 10 பேர், கவுதமசிகாமணி பெயரில் விருப்ப மனு அளித்தனர். கட்சி தலைமை நடத்திய நேர்காணலுக்கு பின், கள்ளக்குறிச்சி, ஆத்துாரில் தங்கி பிரசாரம் செய்வதற்காக, 'சொகுசு' வீடு தேடும் பணியில் ஈடுபட்டனர்.
எம்.பி., கவுதமசிகாமணி அல்லது சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கத்துக்கு 'சீட்' கிடைக்கும் என, அக்கட்சியினர் எதிர்பார்த்தனர். ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் ஆதரவாளரான மலையரசனை, கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி, வேட்பாளராக கட்சி தலைமை அறிவித்தது.
இந்த அறிவிப்புக்கு பின், 'சிட்டிங்' எம்.பி., கவுதமசிகாமணி, தொகுதி பக்கம் தேர்தல் தொடர்பான பணிகளில் பங்கேற்கவில்லை. இரு நாட்களுக்கு முன் ஆத்துார் அடுத்த, பெத்தநாயக்கன்பாளையத்தில், சேலம், கள்ளக்குறிச்சி தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் ஸ்டாலின் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.
இதில், சேலம் எம்.பி., பார்த்திபன், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். ஆனால், கள்ளக்குறிச்சி எம்.பி., கவுதமசிகாமணி பங்கேற்கவில்லை. எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுடன் கோஷ்டி மோதலால் அவர் பங்கேற்கவில்லை என தகவல் பரவியது. அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர், தேர்தல் பிரசாரத்தில் எம்.பி.,யை காணவில்லை என, கூறி வருகின்றனர்.
இதுகுறித்து, கள்ளக்குறிச்சி எம்.பி., கவுதமசிகாமணி கூறுகையில், ''எம்.பி.,யாக வெற்றி பெற்ற பின், இத்தொகுதிக்கு அதிகளவில் திட்டங்கள் செய்துள்ளேன். விழுப்புரத்தில் அன்று அமைச்சர் உதயநிதி பங்கேற்றதால், முதல்வர் பங்கேற்ற கூட்டத்திற்கு வரமுடியவில்லை. நீங்கள் சொல்வதுபோன்று, கோஷ்டி பிரச்னை எதுவும் இல்லை. நானும் தேர்தல் பணி தான் செய்து வருகிறேன். எதிர்க்கட்சியினர், பொய்யான தகவல் பரப்பி வருகின்றனர்,'' என்றார்.
வாசகர் கருத்து