பா.ஜ., -- -பி.ஜே.டி., கூட்டணி கலைந்தது ஏன்?

ஒடிஷாவை ஆளும் பிஜு ஜனதா தளத்துடன் (பி.ஜே.டி.,) கூட்டணி இல்லை என்று பா.ஜ., மாநில தலைவர் மன்மோகன் சமல், 'எக்ஸ்' தளத்தில் அறிவித்தபோது பலருக்கும் ஆச்சரியம். இந்த முறை பி.ஜே.டி., --- -பா.ஜ., கூட்டாக தேர்தலை எதிர்கொள்வது உறுதியாகி இருந்தது.

என்ன ஆயிற்று?



மக்களவை தேர்தலோடு சட்டசபை தேர்தலையும் எதிர்கொள்ளும் மாநிலம் ஒடிஷா. அங்கு, பி.ஜே.டி., தலைவர் நவீன் பட்நாயக், 2000ம் ஆண்டு முதலாக ஆட்சியில் இருக்கிறார். குடும்பம் கிடையாது. ஊழல் குற்றச்சாட்டுகள் கிடையாது. ஒடிஷாவை வறுமையிலிருந்து மீட்டவர் என்ற பெருமை அவருக்கு உண்டு.

147 இடங்களை கொண்ட ஒடிஷா சட்டசபையில், 2019 தேர்தலில் 112 இடங்களை அவருடைய பி.ஜே.டி., வென்றதோடு, முந்தைய தேர்தலைவிட கூடுதலாக 1.3 சதவீத ஓட்டுகளையும் குவித்தது.

மாநிலத்தில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு செல்வாக்கு இல்லை என்ற போதிலும், 2014 முதல் மோடியின் செல்வாக்கு உயர்ந்து வருகிறது. மாநிலத்தில் நவீன், மத்தியில் மோடி எனும் மனநிலைக்கு ஒடியர்கள் தயாராகின்றனர். ஒடிஷாவில் 21 லோக்சபா தொகுதிகள் உள்ளன. 2019 தேர்தலில் பி.ஜே.டி., 12 இடங்களை வென்றது; பா.ஜ., எட்டு இடங்களை வென்றது; சட்டசபையில் 22 இடங்களை பா.ஜ., வென்றது.

முன்னதாக ஒடிஷாவின் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ், சட்டசபையில் ஒன்பது இடங்களோடும், லோக்சபாவில் ஒரு இடத்தோடும் சுருங்கியது. காங்., கின் ஓட்டுகள் பா.ஜ., வசம் திரும்பின.

பி.ஜே.டி., சரியும்



-இந்த தேர்தலில் பி.ஜே.டி., இடங்கள் மேலும் சரியும், பா.ஜ., செல்வாக்கு மேலும் உயரும் என்று கணிப்புகள் சொல்கின்றன. நவீன் மீண்டும் முதல்வராவது உறுதி என்றாலும், பா.ஜ.,வின் இடங்கள் அதிகரித்தால், சட்டசபையில் அவருக்கு எதிராக கூச்சல் அதிகரிக்கும்.

அதேபோல, பா.ஜ.,வுக்கு ஓட்டு விகிதம் அதிகரித்தாலும், ஒடிஷா சட்டசபை தொகுதிகளில் பாதியளவுக்கு மேல் வெல்லும் வாய்ப்பு இல்லை.

அதனால், ஒடிஷா அரசியலில் இழுபறி நிலையை தவிர்க்க, பி.ஜே.டி.,யும் பா.ஜ.,வின் டில்லி தலைமையும் கூட்டணி பேச்சு நடத்தின.

தமிழகத்தை எம்.ஜி.ஆர்., ஆண்டபோது, லோக்சபா தொகுதிகளில் 2/3 பங்கு இடங்களை தேசிய கட்சிக்கு கொடுத்துவிட்டு, சட்டசபை தொகுதிகளில் 2/3 பங்கு இடங்களை அ.தி.மு.க.,வுக்கு எடுத்துக் கொள்வார். 'எம்.ஜி.ஆர்., பார்முலா' என்றே இதற்கு பெயர். இப்படி ஒரு பங்கீட்டை முன்வைத்து தான் பா.ஜ., பேசியது. பி.ஜே.டி.,யும் ஒப்புக் கொண்டது.

ஆனால், இரு கட்சிகளிலும், கீழ் நிலையில் இதற்கு ஆதரவு இல்லை. எல்லா இடங்களிலும் மேலே உள்ளவர்கள் குரலைக் கீழே உள்ளவர்கள் கேட்கும் நிலை என்றால், ஒடிஷாவில் கீழே உள்ளவர்கள் குரலுக்கு ஏற்ப மேலே உள்ளவர்கள் முடிவை மாற்றிக் கொள்ளும் நிலை இருக்கிறது.

முதல்வர் நவீன், 80 வயதை நெருங்குகிறார். அவருக்கு வலது கரம் போன்று செயல்படும் கார்த்திகேயன் பாண்டியனை கட்சி தலைமையை நோக்கிக் கொண்டுவர விரும்புகிறார்.

அடுத்த வாரிசு



ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இருந்த பாண்டியன், முதல்வரின் செயலராக இருந்தவர். தேர்ந்த நிர்வாகி என்று பெயர் எடுத்தவர். அடிப்படையில் தமிழர். என்றாலும், பாண்டியனின் மனைவியும் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான சுஜாதா ஒடிஷாவை சேர்ந்தவர் என்பதால், 'ஒடிஷாவின் மருமகன்' என்று கட்சியினரால் அழைக்கப்படுகிறார்.

தள்ளாமை காரணமாக தேர்தலுக்கு பின் ஆட்சி நிர்வாகத்தை பாண்டியனிடம் நவீன் ஒப்படைத்து விடுவார் என்ற பேச்சு பரவலாக உள்ளது. நவீன் ஒதுங்குவது எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு. கட்சிக்குள்ளும் வெளியிலும் 'பாண்டியன் வெளியாள்' என்ற பேச்சை உருவாக்கி பி.ஜே.டி.,யை அடிக்கலாம்.

கூட்டணி உறவு கொண்டால், இதெல்லாமே தலைகீழாகும். மேடைகளில், பா.ஜ., தலைவர்கள் பாண்டியனோடு கை கோர்க்க வேண்டி இருக்கும். கூட்டணி தர்மத்துக்காக அவரை ஆதரிக்க வேண்டி இருக்கும். அதுவே அவருக்கான அங்கீகாரமாக அமையும் என்பது நவீன் கணக்கு.

'லோக்சபாவில் நம் கட்சிக்கு கூடுதலாக ஐந்தாறு இடங்கள் கிடைக்கும் என்ற ஒரே காரணத்துக்காக இதை நீங்கள் செய்தால், மாநிலத்தில் கட்சியின் வளர்ச்சி காணாமலாகிவிடும்' என்று ஒடிஷா பா.ஜ., தலைவர்கள் டில்லி தலைவர்களிடம் முறையிட்டனர். அங்கு மாநில தலைவர்கள் கடுமையாக உழைத்து செல்வாக்கோடு இருப்பதால், டில்லி தலைமையும் பணிந்தது.

தமிழகத்தை காட்டி...



பி.ஜே.டி.,யிலும் இதேபோல, பா.ஜ., கூட்டணிக்கு, கீழ் நிலையில் எதிர்ப்பு உருவானது. 'பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்த மாநில கட்சிகள் எதையும் பா.ஜ., செல்வாக்காக விட்டுவைக்கவில்லை. தமிழகத்தில் அ.தி.மு.க.,வுக்கும் மஹாராஷ்டிரத்தில் சிவசேனைக்கும் ஏற்பட்டிருக்கும் நிலைதான் நமக்கும் ஏற்படும்' என்று, கட்சி தலைமையிடம் மற்ற தலைவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

கூட்டணியால் நேரிடும் இன்னொரு ஆபத்து, பிரதான எதிர்க்கட்சி எனும் நிலைக்கு காங்கிரஸ் உயரும்.

இதையெல்லாம் யோசித்தே கூட்டணி இல்லை என்ற அறிவிப்பை இரு கட்சிகளும் வெளியிட்டன. 'ஒடிஷாவை பார்த்தாவது நாம் கற்றுக்கொள்ள வேண்டும்' என்று, பக்கத்து மாநிலமான பீஹாரில் இப்போது பேசிக்கொள்கின்றனர். பா.ஜ.,வும், ஐ.ஜ.த.,வும் அங்கே கூட்டணி கண்டிருந்தாலும் கீழே தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சி இல்லை!



ஜனவாகன்

சுயாதீன பத்திரிகையாளர்



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்