மகனுக்கு மகுடம் சூட்ட அமைச்சர் பொன்முடி திட்டம்
கள்ளக்குறிச்சி தொகுதியில் மீண்டும் போட்டியிட, அமைச்சர் பொன்முடி மகன் கவுதம சிகாமணிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. புதுமுகமான மலையரசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கவுதம சிகாமணிக்கு வாய்ப்பு அளித்தால், அவர் வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால், அவர் மீது அமலாக்கத் துறை வழக்கு இருப்பதால், எம்.பி., பதவிக்கு சிக்கல் ஏற்படும் என்பதால், அவரை நிறுத்தவில்லை.
பொன்முடி மீதான ஊழல் வழக்கின் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வழக்கு விசாரணையின் இறுதியில் தண்டனை உறுதி செய்யப்பட்டால், அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்படும். அந்த நேரத்தில் கவுதம சிகாமணியை, திருக்கோவிலுார் தொகுதியில் நிறுத்தலாம் என, தி.மு.க., திட்டமிடுகிறது.
ஆனால், துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, தங்கபாண்டியன் வாரிசுக்கு வாய்ப்பு வழங்கிய தி.மு.க., தலைமை, தன் மகனுக்கு வாய்ப்பு தரவில்லை என்பதால், பொன்முடி அதிருப்தியில் இருக்கிறார்.
குற்றச்சாட்டு
விழுப்புரம் தொகுதி பொறுப்பு அமைச்சரான பொன்முடி, அத்தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாருக்கு ஆதர வாக, தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபடாமல் இருப்பதாக, குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இதனால் தந்தை, மகன் இருவரையும் சமசரப்படுத்தும் வகையில், பிரசாரத்தில் அமைச்சர் உதயநிதி பாராட்டி பேசினார்.
விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு சாலையில் நடந்த கூட்டத்தில், அமைச்சர் உதயநிதி பேசுகையில், 'பொன்முடி என்னை துாக்கி வளர்த்தவர். என் அரசியலுக்கு வழிகாட்டி. கவுதமசிகாமணி போல நானும் அவரது பிள்ளை தான். பொன்முடிக்கோ, சிகாமணிக்கோ ஒன்று என்றால் நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்' என்றார்.
இதற்கிடையில், தன் மகனுக்கு வாய்ப்பு வழங்காததால், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலர் பதவிக்கு, அவரை கொண்டு வரும் முயற்சியில், பொன்முடி இறங்கியிருப்பதாக தெரிகிறது. இந்த விவகாரமும், தி.மு.க.,வில் உள்ள வன்னியர் சமுதாய நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது.
இதுகுறித்து, கட்சிவட்டாரங்கள் கூறியதாவது:
விழுப்புரம் தொகுதி தேர்தல் பணிக் குழு சார்பில், ரவிக்குமாரின் சுற்றுப்பயணம் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. கிளியனுார், வானுார் ஒன்றிய பகுதிகளில், ஓட்டு சேகரிப்பு நடத்தும் இடங்கள் மற்றும் நேரத்தை குறிப்பிட்டு துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.
சிகிச்சை
அதில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, திருமவாளவன், ரவிக்குமார், பொன்முடி, கவுதமசிகாமணி ஆகியோர் படங்கள் மட்டும் இடம் பெற்றிருந்தன. வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.,வும், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலருமான புகழேந்தி படம் இல்லை.
உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், தன் மகன் வாயிலாக, தேர்தல் செலவுக்கு கணிசமான தொகையை அனுப்பி வைத்துள்ளார். இருப்பினும், அவர் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளார். தேர்தல் முடிந்த பின், புகழேந்தியிடமுள்ள மாவட்ட செயலர் பதவியை, தன் மகன் கவுதமசிகாமணிக்கு பெற்றுத் தருவதற்கு பொன்முடி திட்டமிட்டுள்ளார்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
வாசகர் கருத்து