பா.ம.க., வராததால் ஏமாற்றம்: முனுசாமியின் திட்டம் 'அம்போ'
பா.ம.க.,வுடன் கூட்டணி அமையாததால், முனுசாமி மகன், 'சீட்' பெறாமல் நழுவினார். வன்னியர் ஓட்டுகளை பெற, பா.ம.க.,வில் முன்னாள் மாவட்ட செயலராக இருந்த ஜெயப்பிரகாஷிற்கு, அ.தி.மு.க., தலைமை, 'சீட்' வழங்கியுள்ளது.
இதுகுறித்து அ.தி.மு.க., கட்சியினர் கூறியதாவது:
கிருஷ்ணகிரி தொகுதி லோக்சபா தேர்தலில் கடந்த, 2019 தோல்வியடைந்த, அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி, 2021ல், வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது லோக்சபா தேர்தலில் தன் மகன் சதீஷ்குமாரை, அ.தி.மு.க., வேட்பாளராக நிறுத்தி, 2019ல், காங்., வேட்பாளர் செல்லக்குமாரிடம் தனக்கு ஏற்பட்ட தோல்விக்கு, மருந்து போட முனுசாமி காத்திருந்தார்.
'பா.ம.க., கூட்டணிக்குள் வந்து விடும்; வன்னியர் அதிகமுள்ள கிருஷ்ணகிரி தொகுதியில் வெற்றி பெற்று விடலாம்' என, முனுசாமி கணக்கு போட்டு வைத்திருந்தார். அவரது மகன் சதீஷ்குமார் தான் வேட்பாளர் என, கட்சியினரே பேசி வந்தனர். கட்சி தலைமையும், அதே முடிவில் தான் இருந்தது. ஆனால், பா.ம.க., கடைசி நேரத்தில், பா.ஜ., கூட்டணிக்கு சென்றது. அதனால், பா.ம.க., கூட்டணி இல்லாமல், மகனை களமிறக்க முனுசாமிக்கு மனமில்லை.
முதலில் இருந்தே, கூட்டணி பலமாக அமைந்தால் போட்டியிடலாம் என்ற முடிவில் இருந்த சதீஷ்குமாரும், பா.ம.க., கூட்டணிக்கு வராததால், வெற்றி பெறுவது சிரமம் என அறிந்து விலகி கொண்டார். அதனால், அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த ஓசூரை சேர்ந்த எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலர் ஜெயப்பிரகாஷிற்கு, கட்சி தலைமை, 'சீட்' வழங்கியுள்ளது. இவர் முனுசாமியின் தீவிர ஆதரவாளர்.
கடந்த, 2011ம் ஆண்டு வரை, பா.ம.க.,வில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலராக இருந்தவர். அதனால், வன்னியர் சமூக மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர். அச்சமுதாய ஓட்டுகளை பெற, இவரால் காய் நகர்த்த முடியும். மேலும், அனைத்து சமூகத்தினரிடமும் நெருங்கி பழகக்கூடியவர். அ.ம.மு.க., கட்சியினரிடமும் பழக்கமுள்ளது. எவ்வளவு கோடி பணம் வேண்டுமானாலும் செலவு செய்யும் அளவிற்கு ஜெயப்பிரகாஷ் பணபலம் படைத்தவர். அதனால், அவருக்கு கட்சி தலைமை, 'சீட்' கொடுத்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து