'ஸ்டாலினை ஏமாற்றுவது ரொம்ப சுலபம்': மோடியை சொல்லி டி.ஆர்.பாலு உருக்கம்
சென்னை, குன்றத்துார் அருகே மவுலிவாக்கத்தில், தி.மு.க., பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதில், ஸ்ரீபெரும்புதுார் எம்.பி., - டி.ஆர்.பாலு பேசியதாவது:-
கடந்த ஆண்டு, வரலாறு காணாத மழை பெய்தது. மழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க, மத்திய அரசை எதிர்பார்த்தால் விரைவாக நடக்காது. நாம் கொடுத்து விட்டு, பிறகு மத்திய அரசிடம் இருந்து வாங்கிக் கொள்ளலாம் என நினைத்த தலைவர் ஸ்டாலின், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களுக்கும், தென்மாவட்டங்களுக்கும் வெள்ள நிவாரண உதவி கொடுத்தார்.
மழை பாதிப்பு அறிக்கை கொடுக்க நானும், தலைவர் ஸ்டாலினும் மோடியிடம் சென்றோம். பிரதமர் எங்களை பார்த்ததும், 'ஸ்டாலின் ஜி' என குரல் கொடுத்து வரவேற்றார்.
'நீங்கள் ஏன் மனு கொடுக்கிறீர்கள். இது நம்முடைய வேலை. மழையால் பாதிக்கப்பட்டோருக்கு இருவரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும்' என்றார்.
இதைக் கேட்ட தலைவர் ஸ்டாலின் மகிழ்ந்து போனார். தலைவரை ஏமாற்றுவது ரொம்ப சுலபம். எதிரிகள் கூட ரொம்ப அன்பாக பேசினால் தலைவர் மகிழ்ந்து விடுவார்.
பிரதமரிடம் பேசிவிட்டு வெளியே வந்தபோது, தலைவர் ஸ்டாலின், மத்திய அரசு 5,000 கோடி ரூபாய் கொடுக்கும் என நினைக்கிறேன் என என்னிடம் தெரிவித்தார்.
பிரதமர் தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் உண்மையான கரிசனையுடன் உள்ளார் என நினைத்து தலைவர் ஏமாந்தார்.
மனு கொடுத்து பல மாதங்களாகியும் வெள்ள நிவாரண நிதி கொடுக்கவில்லை. 541 கோடி ரூபாய் செலவு செய்தும், மத்திய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை.
மெட்ரோ ரயில் திட்டம் 63,000 கோடி ரூபாய். இதில் மத்திய, மாநில அரசுகள் தலா 50 சதவீதம் கொடுக்க வேண்டும். மெட்ரோ திட்டத்திற்கு பலமுறை மனு கொடுத்தும், மத்திய அரசு நிதி வழங்கவில்லை. தமிழக அரசு 30 ஆயிரம் கோடி ரூபாய் போட்டு பணிகளை செய்து வருகிறது.
மோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ஒரு செங்கல் வைத்து அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு பணிகள் நடக்கவில்லை. அந்த ஒரு செங்கல் உதயநிதி எடுத்துச் சென்று 234 தொகுதிகளிலும் காட்டினார். அதன்பின் அவரது அப்பா முதல்வர் ஆகிவிட்டார். தற்போது அந்த செங்கல்லை 39 தொகுதிகளுக்கும் திருப்பிக் கொண்டுவர உள்ளார்.
தமிழகத்திற்கு வஞ்சனை செய்துவிட்டு தற்போது மோடி ஓட்டு கேட்கிறார். இரண்டு முறை ஏமாந்த மக்கள், மூன்றாவது முறை ஏமாற மாட்டார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து