'மக்கள் நன்மைக்காக போட்டி' : ஓ.பி.எஸ்.,கள் உருக்கம்
ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை எப்படியும் வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் எதிர் அணியினர் இப்போதே காய் நகர்த்த ஆரம்பித்து விட்டனர்.
அதனால் தான் இந்த தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் நான்கு பேரும், எம். பன்னீர் செல்வம் என்ற பெயரில் ஒருவரும் என, மொத்தம் ஐந்து பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் ஐந்து பேரின் வேட்பு மனுக்களும் நேற்று பரிசீலனையின் போது ஏற்றுக்கொள்ளப்பட்டன.
மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த ஒய்யாத்தேவர் மகன் பன்னீர்செல்வத்திடம், 46, பேட்டி காண முயன்றபோது அவர் நழுவிச் செல்ல முயன்றார். 'பேசுவதற்கு ஒன்றுமில்லை. மக்களுக்கு நல்லது செய்ய வந்தேன். வேறு எந்த உள்நோக்கமும் இல்லை' என்றபடி பேசுவதை தவிர்த்தார்.
உசிலம்பட்டி அருகே மேக்கிழார்பட்டி ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம் 42, கூறுகையில், 'நான் ஒரு சாதாரண தொண்டன் தான்' என்றார். அதற்கு நிருபர்கள்
'நீங்கள் எந்த கட்சியில் தொண்டர்?' என கேட்டனர்.
'எந்த கட்சியும் இல்லை. மக்களுக்கு நல்லது செய்ய வந்துள்ளேன்' என்று கூறியபடி வேகமாக சென்று விட்டார்.
மதுரை திருமங்கலம் அருகே வாகைகுளத்தைச் சேர்ந்த ஒச்சாத்தேவர் மகன் பன்னீர்செல்வம், 61, கூறுகையில், 'ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது ஆசை. அதற்காக போட்டியிடுகிறேன். மற்றபடி யார் துாண்டுதலும் இல்லை' என்று கூறியபடியே நடையை கட்டினார்.
மற்ற பன்னீர்செல்வங்களோ நிற்க கூட தாமதிக்காமல்
'பேட்டியா... ஐயோ வேண்டாம். ஆளை விடுங்கள் சாமி' என்று ஓட்டம் பிடித்தனர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.,வில் இருந்து தனித்து விடப்பட்ட நிலையில், சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை எப்படியும் வீழ்த்தியாக வேண்டும் என அ.தி.மு.க.,வில் பழனிசாமி தரப்பினர் கங்கணம் கட்டியுள்ளனர்.
இதற்கிடையே முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அதே பெயர் கொண்ட ஐந்து பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
வாசகர் கருத்து