தீரன் சின்னமலை பெயரை சொல்லி அறுவடை செய்ய அ.தி.மு.க., திட்டம்

தர்மபுரி லோக்சபா தொகுதியில், கொங்கு வேளாளர் சமூக ஓட்டுகளை குறிவைத்து முன்னாள் எம்.எல்.ஏ., சிங்காரம், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் ஆகியோர், அ.தி.மு.க., தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:

தர்மபுரி லோக்சபா தொகுதியில் வன்னியர் சமூக ஓட்டுகளை குறிவைத்து, தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., ஆகிய கட்சிகள் அச்சமூகத்தை சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக களமிறக்கியுள்ளன. தர்மபுரி லோக்சபா தொகுதியில், வன்னியர் சமூக ஓட்டுகள் அதிகளவில் இருந்தாலும், கொங்கு வேளாளர் மற்றும் பட்டியலின மக்களின் ஓட்டுகளே வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கின்றன.

குறிப்பாக, பாலக்கோடு, அரூர் - தனி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய மூன்று தொகுதிகளில், கொங்கு வேளாளர் மற்றும் பட்டியலின மக்களின் ஓட்டுகள் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் காரணியாக இருக்கின்றன.

தி.மு.க., கூட்டணியில், வி.சி., இருப்பதால் பட்டியலின மக்களின் ஓட்டுகளை முழுமையாக அறுவடை செய்து வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில், தி.மு.க., உள்ளது. அதேபோல், பா.ம.க., வன்னிய சமூக ஓட்டுகளை குறி வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இக்கட்சிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கொங்கு வேளாளர் சமூக ஓட்டுகளை குறிவைத்து, அ.தி.மு.க., களமிறங்கியுள்ளது.

கடந்தாண்டு நவ., 23ல் தர்மபுரி மாவட்ட கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சங்கம் சார்பில், அரூரில் தீரன் சின்னமலை சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், உடல்நிலை பாதிப்பு என காரணம் கூறி அவர் வரவில்லை. விழா தள்ளி வைக்கப்பட்டது. அதன் பின்னர் சிலை திறப்பு விழாவையொட்டி, டிச., 8ல் பைக் பேரணி செல்ல முயன்றோரை, போலீசார் கைது செய்தனர். இரு சம்பவங்களும் கொங்கு வேளாளர் சமூகத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கொங்கு சமுதாய மக்களின் கோபத்தை, ஓட்டாக அறுவடை செய்ய, கொங்கு சமூக ஓட்டுகளை வளைக்க, அச்சமூகத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., சிங்காரம், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் ஆகியோரை கடந்த, 29ல் கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமனம் செய்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்தார்.

இதில் முல்லைவேந்தன், ஏற்கனவே தி.மு.க.,வில் அமைச்சராக இருந்து நீக்கப்பட்டவர். இவருக்கு, தி.மு.க.,வினரின் வியூகங்கள் அத்துப்படி. அவர்களின் வியூகங்களை முறியடித்து, அ.தி.மு.க., பக்கம், தான் சார்ந்த சமுதாய மக்களின் ஓட்டுகளை கொண்டு வர சரியான ஆள் என்பதால், முல்லைவேந்தனை, தேர்தல் பணிக்குழுவில் பழனிசாமி கொண்டு வந்துள்ளார்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்