இது தான் கடைசி தேர்தல்: டி.ஆர்.பாலு கண்ணீருக்கு மனம் இரங்கிய ஸ்டாலின்
தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு, 2019 லோக்சபா தேர்தலில், ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்; லோக்சபா தி.மு.க., குழு தலைவராகவும் இருந்து வருகிறார்.
அவருக்கு 86 வயதாகி விட்டதால், தொகுதி மக்களை அடிக்கடி சென்று சந்திக்க முடியவில்லை. கட்சியினர் திருமணம் வீடு, துக்க வீடு விசேஷங்களில் பங்கேற்க முடியாத நிலை உருவாகியுள்ளது. பொதுமக்கள் வசதிக்காக, ஸ்ரீபெரும்புதுாரில் இருக்க வேண்டிய தொகுதி மக்கள் குறை கேட்கும் அலுவலகத்தை அங்கு வைக்காமல், தன் வசதிக்காக சென்னை தி.நகரில் வைத்துள்ளார்.
சீனியர்கள் விருப்பம்
இதனால், அவரை சந்திக்க முடியாமல் தொகுதி மக்கள் சிரமப்படுகின்றனர் என்ற குறையும் எழுந்துள்ளது. எனவே, அவருக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்க, கட்சியின் சீனியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் இளைஞரின் பங்கு இருக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி விரும்புகிறார். அதனால், இம்முறை டி.ஆர்.பாலுவுக்கு 'சீட்' கொடுக்க அவர் விரும்பவில்லை. இதை, தலைமைக்கும் தெரிவித்து விட்டனர்.
ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் போட்டியிட, அமைச்சர் தாமோ.அன்பரசன் மகன் மாறன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதியின் மகன் சாய்பாரதி போன்றவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், தி.மு.க.,விற்கு சர்வே எடுத்து கொடுக்கிற 'பென்' நிறுவனமும், டி.ஆர்.பாலுவுக்கு தொகுதி சாதகமாக இல்லை என கூறிவிட்டது.
கூடவே, தொகுதியில் பாலு செயல்பாடுகள் குறித்து, நீண்ட பட்டியல் போட்டு தலைமைக்கு கொடுத்திருக்கிறது அந்நிறுவனம். அதிலும் பாலுவுக்கு சாதகமாக எதுவும் இல்லை.
இதையடுத்து, தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், எதிர்கோஷ்டியினரால் தன் அரசியல் செல்வாக்கிற்கு பின்னடைவு ஏற்படும் என டி.ஆர்.பாலு கருதுகிறார்.
இதனால் தான், அவர் வரும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என, சிறு குழந்தையாக அடம் பிடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
அறிவாலயத்தில் விருப்ப மனு வழங்குவதற்கு முன், முதல்வர் ஸ்டாலினை சந்தித்த டி.ஆர்.பாலு, 'நான் தேர்தலில் போட்டியிடுவது இது தான் கடைசி முறை. இந்த ஒரு முறை நான் போட்டியிடுகிறேன்.
சமரசம்
கடந்த 10 ஆண்டுகளில் லோக்சபாவில் பா.ஜ.,வுக்கு உரிய பதிலடி கொடுத்து, தி.மு.க., - எம்.பி.,க்களின் சிறப்பான செயல்பாடுகளுக்கு காரணமாக இருந்துள்ளேன்' என, கண்ணீர் மல்க உருக்கமாக பேசியுள்ளார்.
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின், ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் டி.ஆர்.பாலு போட்டியிட இசைவு தெரிவித்து, அவரை விருப்ப மனு வழங்க கூறியுள்ளார். எதிர்கோஷ்டி நிர்வாகிகளை, டி.ஆர்.பாலு வெற்றிக்கு உழைக்க வேண்டும் என சமரசப்படுத்தி வைத்துள்ளார்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
வாசகர் கருத்து