தி.மு.க.,விற்கு எதிராக 1.5 கோடி சீர்மரபினர் கோவிலில் சத்தியம்: நாளை பிரசாரம்
தமிழகத்தில் ஒன்றரை கோடி சீர்மரபினர் கடும் அதிருப்தியில் இருப்பதால், அவர்கள் ஓட்டு, யார் பக்கம் திரும்பும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தி.மு.க., அரசு நம்ப வைத்து ஏமாற்றி விட்டதால், அக்கட்சிக்கு எதிராக, நாளை முதல் பிரசாரம் செய்ய சீர்மரபினர் முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் வசிக்கும் பிரமலை கள்ளர், மறவர், தொட்டைய நாயக்கர், ஊராளி கவுண்டர், வேட்டுவ கவுண்டர், போயர், முத்தரையர் உட்பட மொத்தம், 68 சமூகத்தினர் சீர்மரபு பூர்வீக பழங்குடியினர் (டீநோட்டிபைடு டிரைப்ஸ்) என அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசின் மூலம், டி.என்.டி., என்ற ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர்., இருந்தபோது, 1979 ஜூலை, 30ல் ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அதில், 69 சமூகத்தினருக்கு வழங்கப்படும் டி.என்.டி., என்ற ஜாதி சான்றிதழுக்கு பதில், டி.என்.சி., என சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இது, 68 சமூகத்தினரை அதிர்ச்சியடைய செய்தது. மத்திய அரசின் சலுகைகளை பெற முடியாமல் போனது.
இதையடுத்து, 1980 பிப்., 1 ல், அந்த அரசாணையை எம்.ஜி.ஆர்., ரத்து செய்தார். அதன் பின்னரும் கூட, 68 சமூகத்திற்கும், தமிழகத்தில் டி.என்.டி., ஜாதி சான்றிதழ் வழங்கப்படாமல், டி.என்.சி., என்ற சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிலையில், 2019 மார்ச், 3 ல், அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வராக இருந்த இ.பி.எஸ்., ஒரு அரசாணையை வெளியிட்டார். அதில், 68 சமூகத்தை சேர்ந்தவர்களும், மத்திய அரசின் சலுகைகளை பெற, டி.என்.டி., என்றும், மாநில அரசின் சலுகைகளை பெற டி.என்.சி., என்றும் ஜாதி சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கணக்கெடுப்பு
ஒரு சமூகத்திற்கு இரட்டை ஜாதி சான்றிதழ் குழப்பத்தை ஏற்படுத்தியது. இது அ.தி.மு.க., அரசு மீது, 68 சமூக மக்களையும் அதிருப்தியடைய, செய்தது. டி.என்.டி., என ஒற்றை சான்றிதழ் வழங்க வேண்டும் என, 68 சமூகத்தை சேர்ந்த மக்கள் கேட்டும், இ.பி.எஸ்., செவிசாய்க்கவில்லை.
இதற்கிடையே கடந்த, 2021 மார்ச் மாதம், தமிழக சட்டசபை தேர்தலுக்காக பிரசாரம் செய்த முதல்வர் ஸ்டாலின், ஆலங்குளம் தொகுதியில் பேசும்போது, 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், சீர்மரபினருக்கு வழங்கப்படும் இரட்டை ஜாதி சான்றிதழ் முறையை ஒழிப்போம்' என குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசுகையில், 'சீர்மரபினர் ஆணையம் அமைக்கப்படும். சீர்மரபினர் பழங்குடி சமூக பொருளாதார கணக்கெடுப்பு நடத்தும் உத்தரவை, மத்திய அரசு கடந்த, 2020 ஆக., 18ல் பிறப்பித்தது. அதன்படி மாநில அரசு, தொடர்பு அதிகாரியை, இ.பி.எஸ்., நியமித்திருக்க வேண்டும். ஆனால், இ.பி.எஸ்., அரசு, தொடர்பு அதிகாரியை நியமிக்காமல் துரோகம் செய்கிறது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் தொடர்பு அதிகாரியை நியமிப்போம்' என, ஸ்டாலின் உறுதியளித்தார்.
நிறைவேற்றவில்லை
அவர் கூறியது போல், சமூக பொருளாதார கணக்கெடுப்பு நடத்த, தொடர்பு அதிகாரியை இதுவரை நியமிக்கவில்லை; சீர்மரபினர் ஆணையும் அமைக்கவில்லை; இரட்டை சான்றிதழ் முறையை ஒழிக்கவும் இல்லை. இது, 68 சமூக சீர்மரபினர் பூர்வீக பழங்குடியின மக்களை அதிருப்தியடைய செய்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் ஒன்றரை கோடி ஓட்டுக்கு மேல் இவர்களுக்கு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனக் கூறி, நாளை முதல், தமிழகம் முழுவதும் சீர்மரபினர், தி.மு.க.,விற்கு எதிராக பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளனர். அதனால், ஒன்றரை கோடி சீர்மரபினர் ஓட்டு யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து, சமூகநீதி கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் ராமசாமி கூறுகையில், ''தி.மு.க., - அ.தி.மு.க.,விற்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்க போவதில்லை என, எங்கள் கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம். மாறாக, அவர்களுக்கு எதிராக நாளை முதல் பிரசாரம் செய்ய உள்ளோம். எங்கள் ஆதரவை, பா.ஜ., கட்சி கொடுக்கலாமா என ஆலோசித்து வருகிறோம்,'' என்றார்.
வாசகர் கருத்து