மதத்தை சொல்லி நிர்மலா ஓட்டு கேட்கிறார்: தி.மு.க., புகார்
'தேர்தல் நடத்தை விதிகளை மீறி, மதத்தின் பெயரால் ஓட்டு கேட்ட, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தி.மு.க., சார்பில், தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சமீபத்தில் சென்னையில், நடந்த விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
பெரும்பான்மையினர் பின்பற்றும் மதத்தை அழிப்பேன் எனக் கூறுவது அரசியலா? மத சார்பற்றவர்கள் என்றால், எல்லா மதத்தையும் ஒழிப்போம் எனக் கூறுங்கள். அதைக் கூற தைரியம் கிடையாது. எவரை பற்றி பேசினால், அடிக்க மாட்டார்களோ அவர்கள் குறித்து பேசுவோம் என்பது முழுமையான கோழைத்தனம்.
ஆன்மிகத்துக்கு எதிரான, எந்த கட்சியாக இருந்தாலும் ஆள வரக்கூடாது. கோவில், அறநிலையத்துறை எல்லாம் மாநில அரசு சம்பந்தப்பட்டது; மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது. தேர்தல் அறிவித்தபின், இப்படி பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம்.
நம் கோவிலை அழிக்கக்கூடிய, நம் கோவிலை சுரண்டி தின்னக்கூடிய, நம் மதத்தை அழிப்பேன் என சொல்லக்கூடிய கட்சிகளுக்கு ஏன் ஓட்டு போடுகிறீர்கள். உங்களுடைய ஒவ்வொரு ஓட்டிலும் அதிகாரம் உள்ளது. யாருக்கு ஓட்டு போடுகிறீர்கள் என, யோசித்து ஓட்டு போடுங்கள்.
இவ்வாறு, அவர் பேசினார்.
இது தொடர்பாக, தி.மு.க., சார்பில், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம், புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. புகார் குறித்து, தி.மு.க., வழக்கறிஞர் சரவணன் கூறியதாவது:
தேர்தல் தேதி அறிவித்த பின், நிர்மலா சீதாராமன் மியூசிக் அகாடமியில் நடந்த விழாவில், மதத்தின் பெயரால் ஓட்டு கேட்டுள்ளார். நம் கோவிலையே அழிக்கக்கூடிய, கோவிலையே சுரண்டி தின்னக்கூடிய, நம் மதத்தையே அழிப்பேன் என்று கூறக்கூடிய கட்சிகளுக்கு ஏன் ஓட்டு போடுகிறீர்கள் எனப் பேசி உள்ளார். இது தேர்தல் நடத்தை விதி மீறல். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
வாசகர் கருத்து