'டாஸ்மாக்'கை சொல்லி மகளிரை வளைக்கும் பா.ஜ.,
தி.மு.க., பிரசாரத்தில், 'மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது; இலவச பஸ் விடப்படுகிறது' என்பது முதன்மையானதாகக் கூறப்படுகிறது. இதற்கு பதிலடி அளிக்கும் வகையில், மகளிர் சுய உதவிக் குழுக்களை சந்தித்து, மதுக் கடைகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து தெரிவித்து, பா.ஜ., மகளிரணியினர் பிரசாரம் செய்கின்றனர்.
இது குறித்து, பா.ஜ., மகளிரணியினர் கூறியதாவது:
மத்திய அரசு, பெண்கள் சுயதொழில் செய்து, தற்சார்பு நிலையை அடைவதற்காக வங்கிகளின் வாயிலாக, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கியுள்ளது. இதனால், தமிழகத்தில் பல லட்சம் பெண்கள் பயன் அடைந்துள்ளனர்.
தி.மு.க.,வினர், பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்குவதாகவும், இலவச பஸ் விடுவதாகவும் தங்கள் பிரசாரத்தில் தொடர்ந்து கூறி வருகின்றனர். அக்கட்சி சட்டசபை தேர்தலின்போது, அனைத்து குடும்பத் தலைவிக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்குவதாக வாக்குறுதி அளித்தது. அந்த தொகை, பாதி பேருக்குக் கூட கிடைக்கவில்லை. 'டாஸ்மாக்' நிறுவனம், தி.மு.க.,வினர் நடத்தும் மதுபான ஆலைகளில் இருந்து தான் அதிக மது வகைகளை கொள்முதல் செய்கிறது. இதனால் தான் மதுவிலக்கு அமல்படுத்தப்படவில்லை.
இந்த விபரங்கள் அனைத்தும், பா.ஜ., வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில், மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்களை அழைத்து, கூட்டம் போட்டு தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து