காலை 6:00 மணிக்கு டி.ஆர்.பாலு ஆஜர்: பெண்கள் வராததால் தி.மு.க.,வினர் கதறல்
ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் டி.ஆர்.பாலு, தினம் காலை 6:00 மணிக்கு பிரசாரத்திற்கு கிளம்பி விடுகிறார்.
சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க, காலை 5:00 மணிக்கே தயாராகி, 6:00 மணிக்கு பிரசார பகுதிக்கு வந்துவிடுகிறார். ஆனால், நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர், தொண்டர்கள் ஆகியோர், அந்நேரத்திற்கு அங்கு வருவதில்லை.
இதனால் கடுப்பாகும் அவர், முக்கிய நிர்வாகிகளுக்கு மொபைல் போனில் அழைத்து, சீக்கிரம் வரும்படி எரிச்சலுாட்டுகிறாராம்.
இது குறித்து, தி.மு.க.,வினர் கூறியதாவது:
காலையில் 6:00 மணிக்கே வரவேண்டுமென்றால் அதற்கு முன்னரே நாங்கள் தயாராகி, கூட்டத்தினரை சேர்க்க வேண்டும்.
பெண்கள் கூட்டத்தை அவர் எதிர்பார்க்கிறார். ஆனால், காலை பிரசாரத்திற்கு வருவதற்கு, பெண்கள் தயாராக இல்லை. பிள்ளைகள், சமையல், குடும்பத்தை பார்க்க வேண்டும் எனக்கூறி வர மறுக்கின்றனர். இது குறித்து சொன்னால் எரிச்சலடைகிறார்.
கட்சியின் மூத்த தலைவர் என்பதால், கீழ்மட்ட கட்சியினரை அவர் எப்போதும் மதிப்பதில்லை. தேர்தல் நேரத்திலும், அதையே கடைபிடிக்கிறார்.
தேர்தல் செலவுக்கு கிள்ளித்தான் கொடுகிறார். ஆனால், கட்சிக்காக அவர் கொடுக்கும் தொகையைவிட, 10 மடங்கு நாங்கள் செலவு செய்து, அவருக்காக ஓட்டு சேகரிக்கிறோம். அவருக்காக இவ்வளவு செய்தும், எங்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்.
வயது மூப்பு காரணமாக அவர் அடிக்கடி கோபப்படுவது வாடிக்கையாகிவிட்டது. செலவு செய்தும் கட்சிக்காக இதையெல்லாம் வேறு வழியின்றி அனுசரித்து செல்ல வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து