தமிழக மக்கள் மோடியை பார்த்து ஏமாற மாட்டார்கள் : முதல்வர் ஸ்டாலின்
" தேர்தல் வரும்போது மட்டும் வருகிறவர்கள் யார் என மக்களுக்குத் தெரியும். தமிழக மக்கள் ஒருபோதும் மோடியை பார்த்து ஏமாற மாட்டார்கள்' என, மயிலாடுதுறையில் நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ரூ.656 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின், இன்று அடிக்கல் நாட்டினார். அதை தொடர்ந்து, புதிதாக கட்டப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்று மயிலாடுதுறை மாவட்டத்தை அறிவித்து, ஒன்றரை ஆண்டுகளுக்குள் புதிய கலெக்டர் அலுவலகத்தைக் கட்டியுள்ளோம். 2 ஆண்டுகளில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 28 லட்சம் இளைஞர்கள் பயன்பெற்றுள்ளனர். இந்த ஆட்சியில் அறிவிப்புகளை எல்லாம் அரசு ஆணைகளாக மாற்றி வருகிறோம்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதால் பிரதமர் மோடி, தமிழகத்துக்கு வரத் துவங்கி இருக்கிறார். நாம் வைக்கும் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டு அவர், தமிழகம் வர வேண்டும். தமிழக மக்களின் வரிப்பணமும் ஓட்டுகளும் மட்டும் போதும் என பிரதமர் மோடி நினைக்கிறார்.
சமீபத்தில் ஏற்பட்ட 2 இயற்கை பேரிடர்களுக்கும் ஒரு பைசா கூட நிதி தரவில்லை. ஆனால், பதவியை காப்பாற்றிக் கெள்ள ஆதரவு கேட்டு பிரதமர் வருகிறார். தமிழக மக்கள் ஒருபோதும் மோடியை பார்த்து ஏமாற மாட்டார்கள். தமிழகத்தின் உரிமைக்காக தி.மு.க., பக்கம் மட்டுமே நிற்பார்கள்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
நீங்கள் நலமா?
விழாவில் பேசிய ஸ்டாலின், "சென்னையில் வரும் 6ம் தேதி இந்த திட்டத்தை நீங்கள் நலமா என்ற திட்டத்தைத் துவங்கி வைக்கிறேன். அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பயன், மக்களுக்கு உரிய முறையில் சென்றடைகிறதா என்பதை உறுதி செய்வதற்காக இந்த திட்டம் துவங்கப்படுகிறது. ஆட்சியர்கள் முதல் அனைத்து துறை செயலாளர்கள் வரையில் மக்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மக்களின் கருத்துகளைக் கேட்பார்கள். நானே மக்களை நேரடியாக தொடர்பு கொண்டு பேசுவேன்' என்றார்.
வாசகர் கருத்து