Advertisement

எங்கள் காதுகள் பாவமில்லையா : மோடியை விமர்சித்த ஸ்டாலின்

"கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்ததாம் மத்திய பா.ஜ., அரசு. இது அப்பட்டமான பொய்க்கணக்கு" என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்ததாம் மத்திய பா.ஜ., அரசு. இது அப்பட்டமான பொய்க்கணக்கு. இதில் 2 கூறுகள் உள்ளன:

முதலாவது, மத்திய நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய நிதிப் பகிர்வையும், திட்டங்களுக்காக மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியையும் உள்ளடக்கியது இது.

இதன்கீழ் உத்தரப்பிரதேசத்துக்கு 18.5 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த பா.ஜ., அரசு, பல லட்சம் கோடி ரூபாயை வரியாகப் பெற்ற தமிழகத்துக்கு கிள்ளிக் கொடுத்ததோ 5.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே.

அடுத்து, மத்திய அரசு ஒரு மாநிலத்தில் நேரடியாக செயல்படுத்தக்கூடிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு.

இதில் பா.ஜ., காட்டியுள்ள பொய்க்கணக்குகள் என்னென்ன தெரியுமா?

இன்னும் ஒற்றைச் செங்கல் கூட எடுத்து வைக்கப்படாத மதுரை எய்ம்ஸ்க்கு 1,960 கோடி,

ஒரு ரூபாய் கூட நிதி விடுவிக்கப்படாத சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு 63,246 கோடி,

சாகர்மாலா திட்டத்திற்கு 2 லட்சம் கோடி என்று ஒட்டுமொத்த தமிழ் மக்கள் காதிலும் பூச்சுற்ற நினைக்கிறது பா.ஜ., அரசு.

இந்தத் திட்டங்களின்கீழ் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் செலவழிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு, விடுவிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு என்பதை எந்த பா.ஜ., அமைச்சர்களாவது விளக்க முன்வருவார்களா?

இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் எடுத்து விடப்பட்டுள்ள அநியாயப் பொய் இது தான்.

தங்களுடைய உழைப்பாலும் தொழில் திறத்தாலும் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ள சிறுதொழில் முனைவோர்கள் வங்கிகளில் வாங்கி, திருப்பிச் செலுத்த வேண்டிய 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் அனைத்தையும் தாராளமாக நிதி வழங்கியது போல பா.ஜ., அரசு கூறிக்கொள்கிறது. எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும். எங்கள் காதுகள் பாவமில்லையா?

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்