தாமரை சின்னத்தில் போட்டியில்லை : உறுதியாக இருக்கும் பன்னீர்செல்வம்
லோக்சபா தேர்தலில், எந்த சின்னத்தில் போட்டியிடுவது என, லேசான குழப்பம் பன்னீர்செல்வத்துக்கு இருந்தாலும், தன்னுடைய ஆதரவாளர்களின் தீர்க்கமான முடிவுக்குப் பின், தாமரை சின்னத்தில் போட்டியில்லை என்ற உறுதியான மனநிலைக்கு வந்துள்ளார். தன் அணி நிர்வாகிகளுடன் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின், இப்படியொரு முடிவுக்கு அவர் வந்திருப்பதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தனி அணியாக செயல்பட்டு வருகிறார். லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளார். பா.ஜ., தலைவர்களுடன் நடந்த கூட்டணி பேச்சில், பா.ஜ., தரப்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும்படி கூறியுள்ளனர். அதை பன்னீர்செல்வம் ஏற்கவில்லை. கட்சியினருடன் ஆலோசித்து முடிவெடுப்பதாக, பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நேற்று அவர் தலைமையில், சென்னையில் தனியார் ஹோட்டலில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் நடந்த நிகழ்வு குறித்து, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூறியதாவது:
தேனி அல்லது ராமநாதபுரம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், ஆரணி தொகுதியை, பா.ஜ.,விடம் கேட்டு பெற முடிவு செய்திருந்த நிலையில், போட்டியிட தேர்வு செய்யப்பட்டவர்கள், பா.ஜ.,வின் தாமரை சின்னத்தில் நிற்போம் எனக் கூற, அதை மற்றவர்கள் ஏற்கவில்லை.
இரட்டை இலை சின்னம் கேட்டு, தேர்தல் கமிஷனுக்கு செல்ல முடிவு செய்துள்ளோம். கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளோம். இந்நிலையில் தாமரை சின்னத்தில் களம் இறங்கினால், அது நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, தாமரை சின்னத்தில் போட்டியிடக் கூடாது என்றனர்.
தேர்தலில் போட்டியிட விரும்பியவர்கள், இரட்டை இலை கிடைத்தால் பிரச்னை இல்லை. இல்லையெனில், சுயேச்சை சின்னத்தில் வெற்றி பெறுவது சிரமம். எனவே, தாமரை சின்னத்தில், பன்னீர்செல்வம் ஆதரவு பெற்ற வேட்பாளர் என அறிவித்து நிற்போம். வெற்றி பெறுவோம். சுயேச்சை சின்னம் எனில், பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, தேர்தலில் போட்டியிடாமல் இருப்போம் என்றனர்.
இது தொடர்பாக, காரசார விவாதம் நடந்தது. இறுதியாக, இரட்டை இலை கேட்டு தேர்தல் கமிஷனில் விண்ணப்பிப்போம் என முடிவெடுக்கப்பட்டது.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து