மோடியும் ஜெயலலிதாவும் ஒத்த கருத்து உடையவர்கள்: பன்னீர்செல்வம் சிறப்பு பேட்டி

தமிழகத்தில் மூன்று முறை முதல்வராகவும், அ.தி.மு.க.,வில் 12 ஆண்டுகள் தொடர்ந்து, கட்சியின் பொருளாளராகவும் பதவி வகித்தவர் பன்னீர்செல்வம். இவர் முதல்வராக இருந்த போது தான் பிரதமர் மோடியுடன் பேசி, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியின் மீதான தடையை நீக்கி மீட்டெடுத்து, 'ஜல்லிக்கட்டு நாயகன்' என்ற பெயர் பெற்றார்.

அமைதியின் உருவமான பன்னீர்செல்வம், தற்போது ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில், பா.ஜ., கூட்டணியில்சுயேச்சை வேட்பாளராக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். நம் நாளிதழுக்கு அவர் அளித்த மனம் திறந்த பேட்டி:

இதுவரை அ.தி.மு.க., சார்பில் தேர்தலை சந்தித்துவிட்டு தற்போது அக்கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உங்கள் மனநிலை என்ன?



அ.தி.மு.க.,வில் ஜெ., தொண்டனாக பணிபுரிந்தேன். அவர் சொன்னதை மட்டுமே செய்தேன். எனக்கு வேறு எதுவும் இல்லை. அவர் தான், என்னை, கடந்த 2001லும், 2014லும் இரண்டு முறை முதல்வராக ஆக்கினார். அவர் காலமான பிறகும் என்னை தான் முதல்வராக கட்சியினர் தேர்வு செய்தனர்.

மூன்று முறை முதல்வராகவும், கழக பொருளாளராகவும் இருந்த என்னை வரவு - செலவு அறிக்கை தாக்கல் செய்ய விடாமல் இரங்கல் தீர்மானம், நன்றியுரை கூறி முடித்து விட்டனர். விதிகளுக்கு புறம்பாக கூட்டத்தை முடித்து பொதுக்குழுவில் தகாத வார்த்தை பேசி, தண்ணீர் பாட்டில்களை என் மீது வீசினர்.

அவர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் அல்ல. பழனிசாமியின் குண்டர்கள். தற்போது கழகத்தை மீட்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கி உள்ளனர்.

சசிகலா, தினகரன் ஆகியோருக்கு எதிராக தர்மயுத்தம் துவங்கிய நீங்கள், இன்று அவர்களுடன் இணைந்து அரசியல் செய்கிறீர்களே? முன்பு எடுத்த முடிவு தவறா?



இல்லை, இல்லை. அப்போது எடுத்த முடிவும் சரிதான். தற்போது எடுத்த முடிவும் சரிதான். ஏன் என்றால் கட்சி ஒற்றுமைக்காக தான் இப்போது இந்த முடிவு. இரண்டாவது தர்ம யுத்தம் நடத்தும் போது கூட ஒன்றுசேர்ந்து செயல்பட, 1 சதவீதம் கூட வாய்ப்பு இல்லை என்றார் பழனிசாமி. அ.தி.மு.க., என்ன அவரது தாத்தா வீட்டு கட்சியா? அவருக்கு முதல்வர் பதவி தந்த சசிகலாவை தவறாக பேசினார். அப்படி பேசலாமா? அரசியல் நாகரிகம் பழனிசாமியிடம் இல்லை.

அ.தி.மு.க.,வில் உங்களுக்கு அவைத்தலைவர் பதவி தருவதாக கூறிய நிலையில், பொதுச் செயலர் பதவிதான் வேண்டும் என பிடிவாதம் பிடித்ததால் நீக்கப்பட்டதாக கூறப்படுவது உண்மையா?



அந்த கேள்விக்கு இடமே இல்லை. எந்த பதவியும் கேட்டது இல்லை. நான் முதல்வராக, ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளேன். பதவிகளுக்கு கட்சித் தொண்டர்கள் வர வேண்டும். எம்.ஜி.ஆர்., கட்சி நடத்த பல்வேறு சட்ட விதிகளை கொண்டு வந்தார்.

அதில் ஒரு விதியை மட்டும் திருத்தம் செய்யவோ, மாற்றம் செய்யவோ கூடாது என உள்ளது. அதுதான் உச்சபட்ச பதவியான பொதுச்செயலர் பதவி. இப்பதவிக்கு சாதாரண தொண்டன் கூட போட்டியிடலாம் என்ற விதியை மாற்றி ரத்து செய்தார் பழனிசாமி.

பத்து மாவட்ட செயலர் முன்மொழிவுடன், 10 மாவட்ட செயலர் வழிமொழிந்தால் மட்டுமே வெற்றி பெறலாம் என்று அந்த விதிகளில் திருத்தம் செய்தார். அவ்வளவு பணம் எந்த தொண்டரிடம் உள்ளது? தங்கமணி, வேலுமணி, பழனிசாமியிடம் தான் உள்ளது.

தி.மு.க.,வில் இருந்த போது எம்.ஜி.ஆர்., கட்சி கொள்கை மற்றும் கோட்பாடுகளை சினிமாவில் நடித்து பாடல்கள் வழியாக வளர்த்தார். கட்சிக்காக உழைத்தவர் எனக்கூறி 1967ல் ஆட்சி அமைக்க எம்.ஜி.ஆர்., தான் காரணம் என முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பாராட்டினார்.

அப்படிபட்ட தலைவரை 18 பேர் கையெழுத்திட்டு வெளியேற்றினர். அதை மனதில் கொண்டு தான் எம்.ஜி.ஆர்., ஆரம்பித்த அ.தி.மு.க.,வில் தொண்டர்களுக்கும் அதிகாரம் கொடுத்தார்.

பழனிசாமியுடன் ஏன் சமரசம் செய்து கொள்ளவில்லை?



பழனிசாமி தலைமையில் கட்சி ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறவில்லை. அரசியல் ரீதியாக ஈரோடு இடைத்தேர்தலின் போது நான் மற்றும் தினகரன் தரப்பில் தனித்தனியாக ஆட்களை நிறுத்தினோம்.

பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தொடர்புகொண்டு தி.மு.க.,விற்கு சாதகமாகிவிடும் நம்ம ஓட்டு சிதறக்கூடாது என்று கூறினார். இதையடுத்து எங்கள் வேட்பாளர்கள் விலகினர். இவ்வளவு செய்தும் பழனிசாமியால் வெற்றிபெற முடியவில்லை. அவர்தான் தனித்து செயல்படுகிறார்.

தி.மு.க., உடன் உங்களுக்கு தொடர்பு என்று பழனிசாமி தரப்பு குற்றம் சாட்டுகிறதே...



நிரூபிக்க சொல்லுங்கள், சட்டசபையில் பாடி லாங்வேஜ்ல் அவர்கள் தான் (ஸ்டாலின், பழனிசாமி) பேசிக்கொள்கின்றனர். சட்டசபை நடவடிக்கைகளை நீங்கள் கவனித்திருந்தால் இந்த கேள்விக்கு விடை கிடைக்கும். கோடநாடு கொள்ளை, கொலை வழக்கை விசாரித்து மூன்று மாதங்களில் நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் கூறினார். தற்போது மூன்று ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. பழனிசாமிக்கு தான் தி.மு.க.,வுடன் தொடர்பு உள்ளது.

இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்காக மட்டுமே நீங்கள் இன்னும் தனி அணியாக, பா.ஜ.,வின் கருவியாக செயல்பட்டு வருவதாக அ.தி.மு.க.,வினர் குற்றம் சாட்டுகின்றனரே...



அது எல்லாம் கிடையாது. பா.ஜ.,தேசிய கட்சி, அவர்கள் 18 மாநிலங்களை ஆளுகின்றனர். இரண்டு முறை வெற்றி பெற்று ஆட்சி செய்கின்றனர். மூன்றாவது முறையாக மோடி தான் வருவார் என்ற ஆரோக்கியமான சூழ்நிலை உள்ளது. பல்வேறு தரப்பட்ட மக்கள் வாழ்ந்தாலும் அனைவரையும் ஒரே குடையின் கீழ் இணைத்து உள்ளனர்.

அ.தி.மு.க.,வுடன் பா.ஜ., கூட்டணி அமைந்திருந்தால், தொடர்ந்து அந்த கூட்டணியில் அங்கம் வகித்திருப்பீர்களா?



என் எண்ணம், சிந்தனை எல்லாமே மோடி மீண்டும் வர வேண்டும். நான் ஒத்துழைப்பு தருவேன். யாருடன் கூட்டணி வைத்தாலும் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வர வேண்டும்.

ஒரு வேளை அ.தி.மு.க., அல்லது இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றும் முயற்சி தோல்வியடைந்தால் உங்கள் அடுத்த அரசியல் நகர்வு என்னவாக இருக்கும்?



சர்வாதிகாரத்தின் கோரமுகமாக பழனிசாமி செயல்படுகிறார். இரட்டை இலை உட்பட அவருக்கு எல்லாமே தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது. கடைசியாக உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற போது கூட சிவில் நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதியாக இருக்கும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

எனவே அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தை மீட்க தொடர்ந்து தொண்டர்களுடன் போராடுவேன்.

அ.தி.மு.க.,வினருக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?



அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்.,- ஜெயலலிதா எந்த நோக்கத்திற்காக உருவாக்கினார்களோ, அந்த நிலை ஏற்படுவதற்கு தொண்டர்கள் விரும்புகின்றனர். பழனிசாமியின் செயல்பாட்டால் கட்சி பாதாளத்திற்கு போய்விட்டது. தெய்வாதீனமாக அ.தி.மு.க., கட்சியை மீட்க அனைத்து தொண்டர்களும் ஒன்றுசேர வேண்டும்.

அ.தி.மு.க., ஓட்டுகள் பா.ஜ., பக்கம் திரும்பி இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். கள அனுபவத்தில் இது நடப்பதாக உணர்கிறீர்களா?



அ.தி.மு.க., ஓட்டு திரும்பவில்லை. பா.ஜ., வளர்ந்துள்ளது. சரியான கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை பல கட்டங்களாக பொறுப்பாளர்களை நியமித்து உண்மையாக உழைக்கின்றனர். பா.ஜ., ஆட்சியை நிலைநிறுத்த பாடுபடுகின்றனர். அதுதான் காரணம்.

பா.ஜ., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உருவாகி இருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. களத்தில் இந்த மாற்றம் எதனால் நடந்துள்ளது?



இது இந்தியாவை யார் ஆள வேண்டும் என்பதற்கான தேர்தல். அதற்கு விடை காண வேண்டும். ஒரே விடை, 10 ஆண்டுகளாக சிறப்பாக செயல்படும் பா.ஜ., அரசு தான். இதற்கு முன்பு பல கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைத்தனர். அது நிலையானதாக இல்லை.பா.ஜ.,விற்கு தனி மெஜாரிட்டி கிடைத்தும், 10 ஆண்டுகளாக தோழமை கட்சிகளுக்கு பதவி தருகின்றனர். உறுதுணையாக உள்ளனர். இந்த தேர்தலில், 400க்கு மேற்பட்ட இடங்களில் வென்று உறுதியாக மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவார்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை பிரதமர் மோடி தொடர்ந்து பாராட்டி பேசி வருகிறார். அதன் அரசியல் பின்னணி என்ன? அ.தி.மு.க., ஓட்டுகளை இழுப்பதற்கா?



இது தலைவர் எம்.ஜி.ஆர்., மீது மோடிக்குள்ள அன்பு, மரியாதை, பிரியத்தை காட்டுகிறது. மோடி முதல்வர் பதவி ஏற்பு விழாவிற்கு ஜெ., குஜராத்திற்கு சென்றார். மோடியும் ஜெ., வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். சகோதரர், சகோதரியாக இருந்தனர். இந்திய அரசியலில் நிலையான தன்மை ஏற்பட வேண்டும் என்ற ஒத்த கருத்து உடையவர்கள்.

மூன்று முறை முதல்வராக இருந்த போது உங்களுக்கு மன நிறைவு தந்தது எது? ஏமாற்றத்தை தந்தது எது?



அரசியல் பணி, இயக்கப் பணியாக என எந்த பணியாக இருந்தாலும், மன நிறைவுடன், எதையும் எதிர்பார்க்காமல் என் கடமையாக கருதி பணிபுரிகிறேன். ஜெ., காலத்தில் நான் தான் 12 ஆண்டுகளாக தொடர்ந்து கட்சியின் பொருளாளராக இருந்தேன்.

அப்போது கட்சி நிதியில், 2 கோடி ரூபாய் பற்றாக் குறை இருந்தது. அதன் பின் அந்த நிலையை மாற்றி, 286 கோடி ரூபாயாக வங்கியில் வைப்புத்தொகை உயர செய்தேன். தற்போது அது எந்த நிலையில் உள்ளதோ, நிதியை என்ன செய்தனரோ?

ஜெயலலிதாவிடம் நீங்கள் கற்றுக் கொண்டது என்ன?



கற்றுக்கொண்டது கடல் அளவு. அமைதியாகவும், ஆரவாரம் இல்லாமலும் கட்சியை நடத்தினார். ஒழுக்கமாக கட்சியை நடத்தினார். யாரும் மூச்சுவிட முடியாது. 13 ஆண்டுகளுக்கு பிறகு ஜெ.,விற்கு பிரச்னை வந்த போது, விசுவாசம் காரணமாக மீண்டும் முதல்வர் வாய்ப்பு கொடுத்தார். நுாறு சதவீதம் அவர் சொன்ன வேலையை முடிக்க வேண்டும். இல்லை என்றால் வெளியே போங்க எனக் கூறிவிடுவார். அந்த அளவிற்கு ஆளுமை திறன் மிக்கவர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்