தேர்தல் கமிஷனின் செயல்பாடு, சட்டவிரோதம்: ஓ.பன்னீர்செல்வம் புகார்
நீதிமன்ற உத்தரவுகளுக்குப் புறம்பாக தேர்தல் கமிஷன் நடப்பதாக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணியில் சுயேட்சை வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். ராமநாதபுரம் தொகுதியில் களமிறங்கும் அவர், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பன்னீர்செல்வம் சார்பாக தேர்தல் கமிஷனில் பெங்களூரு புகழேந்தி 2 மனுக்களை கொடுத்தார். அதில், 'நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க., என்பதால் லோக்சபா தேர்தலில் எங்களுக்கு இரட்டை இலை சின்னத்தைக் கொடுக்க வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இரண்டாவது மனுவில், 'பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னத்தை கொடுக்கக் கூடாது. ஒருவேளை இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் எங்கள் அணிக்கு பக்கெட் சின்னத்தை ஒதுக்க வேண்டும்' எனக் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், தேர்தல் கமிஷனில் மீண்டும் ஒரு மனுவை கொடுத்துள்ளார், ஓ.பன்னீர்செல்வம். அதில் கூறியிருப்பதாவது:
சட்டவிதிகள், நீதிமன்ற உத்தரவுகளுக்குப் புறம்பாக தேர்தல் கமிஷன் செயல்படுகிறது. பன்னீர்செல்வம், பழனிசாமி கையெழுத்தின்றி அ.தி.மு.க., வேட்பாளர்களின் மனுவை ஏற்றது சட்டவிரோதம்.
வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் படிவம் ஏ, படிவம் பி ஆகியவற்றில் கையெழுத்திடுவதற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இருவருக்கும் சம உரிமை இருக்கிறது. இந்த முறை ஒருவரின் கையெழுத்தை மட்டும் தேர்தல் கமிஷன் ஏற்றுள்ளது.
இருவரும் கையெழுத்திடும் அங்கீகாரம் இருக்கும்போது, ஒருவரின் கையெழுத்தை ஏற்றது ஏற்புடையதல்ல. இதற்கு தேர்தல் கமிஷன் விளக்கம் அளிக்க வேண்டும்
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து