ஓ.பன்னீர்செல்வம், அண்ணாமலை மீது வழக்கு: தேர்தல் கமிஷன் நடவடிக்கை
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
லோக்சபா தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இது தொடர்பாக அறந்தாங்கியில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளின் கூட்டத்தில் பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
அப்போது ஆரத்தி எடுத்த மகளிருக்கு பன்னீர்செல்வம் பணம் கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, அறந்தாங்கி காவல்நிலையத்தில் தேர்தல் கண்காணிப்பு அதிகாரி அருள் என்பவர் புகார் கொடுத்தார். இதையடுத்து, தேர்தல் விதிமுறைகளை மீறி லஞ்சம் கொடுத்ததாக ஓ.பன்னீர்செல்வம் மீது 3 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருச்சியில் அ.ம.மு.க., வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார். தேர்தல் விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தேர்தல் கண்காணிப்பு அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலை, வேட்பாளர் செந்தில்நாதன், அ.ம.மு.க., அமைப்புச் செயலர் சாருபாலா தொண்டைமான் உள்பட 700 பேர் மீது திருச்சி, தில்லை நகர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து