Advertisement

தாமரையை குத்தும் முட்கள்

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, பா.ஜ., தலைமை கையாளும் சில உத்திகள், பல்வேறு பகுதிகளில், அக்கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஹிமாச்சல்



ஹிமாச்சல் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக நடிகை கங்கனா ரனாவத் அறிவிக்கப்பட்டது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த தொகுதி இப்போது காங்கிரஸ் வசம் உள்ளது. ஆறு முறை முதல்வராக இருந்த மறைந்த வீரபத்திர சிங்கின் மனைவி பிரதீபா சிங் தான் எம்.பி.,

பிரதீபாவுக்கும் டில்லி தலைமைக்கும் மனஸ்தாபம் என்பதால், இந்த முறை போட்டியிடப் போவதில்லை என்ற முடிவில் இருந்தார். மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி என்றாலும், லோக்சபாவிற்கு பா.ஜ.,தான் என்ற முடிவில் மக்கள் இருந்தனர். கடந்த 2014, 2019 தேர்தல்களில் பா.ஜ.,வுக்கு அள்ளிக் கொடுத்த மாநிலம் இது. கங்கனாவுக்கு எளிதாக வெற்றி கிடைத்திருக்கும்.

ஆனால், கடந்த சில மாதங்களாக, காங்கிரஸ் ஆட்சியை பா.ஜ., சீண்டிப் பார்க்கிறது. ராஜ்யசபா தேர்தலின் போது, சில காங்., - எம்.எல்.ஏ.,க்களை தன் பக்கம் இழுத்தது. அதனால், ஆட்சி ஆட்டம் காணவே, காங்கிரசார் தங்களுக்குள் இருந்த கசப்பை ஒதுக்கிவிட்டு ஒன்று சேர்ந்துள்ளனர். கட்சி மேலிடம் வாய்ப்பளித்தால் மீண்டும் போட்டியிட தயார் என்று பிரதீபா சிங் அறிவித்துவிட்டார்.

காங்கிரசில் இப்படி ஒரு மாற்றம் என்றால், பா.ஜ.,வுக்குள் நேர் எதிர் மாற்றம். காங்கிரசில் இருந்து வந்தவர்களுக்கு அதிக தேர்தல் வாய்ப்பு அளிக்கப்படுவதாக அதிருப்தி கிளம்பியது. கங்கனா போட்டி என்றதும், அது வெளிப்படையான எதிர்ப்பாக மாறிவிட்டது. 'டில்லியிலிருந்து இஷ்டப்படி முடிவெடுக்கின்றனர். உள்ளூர் தலைவர்களுக்கு மதிப்பில்லை. தேவையில்லாமல் எதிர்க்கட்சி ஆட்சியை கவிழ்க்கும் வேலையில் இறங்குகின்றனர்' என்பதே உள்ளூர் தலைவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

பா.ஜ.,வின் முன்னாள் மாநில தலைவர் மகேஷ்வர் சிங்கின் மகன் ஹிதேஷ்வர் சிங், முன்னாள் பொதுச்செயலர் ராம் சிங், முன்னாள் சட்டசபை உறுப்பினர் கிஷோரி லால் சாகர் ஆகியோர் அதிருப்தி தலைவர்களை இணைக்கும் பணியில் இறங்கி உள்ளனர். டில்லி மேலிடத்தின் சமாதான முயற்சி எதுவும் இதுவரை எடுபடவில்லை.

'கட்சிக்காகவும் கொள்கைக்காகவும் உயிரைக் கொடுத்து வேலை செய்தோரை விட்டுவிட்டு, வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற காரணத்தைச் சொல்லி, புதிதாக வருவோருக்கு வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தால் கட்சி உருப்படாது' என்று இவர்கள் பேசுவது கங்கனாவுக்குப் பெரும் சங்கடமாக உருவெடுத்து உள்ளது.

குஜராத்



குஜராத்தை கடந்த 30 ஆண்டுகளாக பா.ஜ., ஆட்சி செய்கிறது. 2014, 2019ல் அனைத்து தொகுதிகளிலும் வென்றது. எதிர்க்கட்சிகளே கண்ணில் தென்படாத மாநிலம். இப்படி ஒரு மாநிலத்தில் இரண்டு பா.ஜ., வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகுவது, சாதாரணமாக நடக்கக் கூடிய விஷயமா? ரஞ்சன்பென் பட், பிகாஜி தாக்கூர் என்ற இருவர் விலகியுள்ளனர்.

பிகாஜி தாக்கூர், விஸ்வ ஹிந்து பரிஷத்தில் இருந்து வந்தவர். குஜராத், உ.பி., உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்தல் பணி அனுபவம் பெற்றவர். அடிமட்டத்திலிருந்து வந்தவர். அதே சமயம், கட்சியினரிடமோ மக்களிடமோ பெரிய செல்வாக்கு கிடையாது. ஆனால், ரஞ்சன்பென் பட் அப்படி இல்லை. குஜராத் பா.ஜ.,வில் நன்கு அறியப்பட்ட பெண் தலைவர்களில் ஒருவர்.

இரு தொகுதிகளில் நின்று வென்ற மோடி, வாரணாசியை கையில் வைத்துக் கொள்வதற்காக வடோதரா பதவியை ராஜினாமா செய்தபோது, அந்த இடத்தில் அன்றைய முதல்வர் ஆனந்திபென் படேலால் நிறுத்தப்பட்டவர். தொடர்ந்து இருமுறை அந்த தொகுதியை வென்றவர்.

இருவருக்குமே கட்சியில் கடுமையாக எதிர்ப்பு. 'கட்சியினரிடத்தில் செல்வாக்கு பெற்றோர் தொகுதியில் இருக்கும்போது இவரை ஏற்க மாட்டோம்' என்று பிகாஜியை நிராகரித்தனர். 'நன்றாகப் பணியாற்றிய எம்.பி.,க்கள் பலருக்கே வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில், சரியாக பணியாற்றாத இவருக்கு ஏன் மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுக்கிறீர்கள்' என்று கேட்டு, ரஞ்சன்பென்னை நிராகரித்தனர். இதெல்லாம் நான்கு சுவருக்குள் நடக்கவில்லை. “ரஞ்சன்பென்னை மீண்டும் மீண்டும் அறிவிக்க வேண்டி, கட்சிக்கு என்ன நிர்ப்பந்தம் இருக்கிறது?” என்று ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பினார், பா.ஜ.,வின் மகிளா மோர்ச்சா தேசிய துணைத் தலைவர் ஜோதி பாண்டியா.

ரஞ்சன்பென் மீது ஊழல் குற்றச்சாட்டுகளோடு வடோதராவில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டது. பிகாஜி, தன் ஜாதியையே மாற்றிக் கூறி வாய்ப்பு தேடுபவர் என்று வெளிப்படையாக விமர்சித்தனர். மாவட்ட பா.ஜ., தலைமை அலுவலகத்திற்கு வெளியே கூடி, தங்கள் காவி துண்டுகளை எறிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களின் சொந்த ஊருக்கு வெளியே போட்டியிடும் மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா மற்றும் புருசோத்தம் ருபாலா தேர்வும்கூட இப்படி எதிர்ப்பை உருவாக்கி உள்ளது.

பா.ஜ.,வில் இதெல்லாமே பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளன. ஏனெனில், இதுவரை, குஜராத்தில் இப்படியெல்லாம் நடந்ததே இல்லை என்கின்றனர்.

மோடி - -ஷா நேரடி கட்டுப்பாட்டில் உள்ள மாநிலம் என்பதால், இந்த குரல்கள் மறைமுகமாக கட்சி தலைமைக்கு எதிரான குரல்கள்.

இந்த அதிருப்திக்கு காரணம் டில்லிமயமாதல். “இப்போது வேட்பாளர் நேர்காணல் எல்லாம் சம்பிரதாயம் போல் ஆகிவிட்டது. வந்தனர்; வந்த வேகத்தில் சென்றனர்; முடிவெல்லாம் முன்பே டில்லியில் எடுக்கப்பட்டு விட்டது. மேலேயிருந்து இப்படி ஆட்கள் திணிக்கப்பட்டால் காங்கிரஸ் போல பா.ஜ.,வும் ஆகிவிடும்,” என்று கட்சியினர் குமுறுகின்றனர்.

மஹாராஷ்டிரா



மஹாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் என இரு கட்சிகளை பா.ஜ., உடைத்துள்ளது. இரண்டு நிகழ்வுகளிலுமே, கட்சியின் பிரதான தலைவரிடம் இருந்து கட்சியும், சின்னமும் பறிக்கப்பட்டுள்ளன. அதன் வாயிலாக ஏகாதிபத்தியத்தை அனுபவிக்கலாம் என்பது பா.ஜ., கணக்கு. ஆனால், இது மராத்தா மக்களிடையே கசப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, மராத்தாக்களால் நேசிக்கப்படும் தலைவர். அவரிடம் இருந்து கட்சி பறிக்கப்பட்டதை மராத்தாக்களால் ஏற்க முடியவில்லை.

மராத்தாக்களுக்கான இடஒதுக்கீடு விவகாரத்திலும் பா.ஜ.,வால் மராத்தாக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மராத்தா இனத்தை சேர்ந்த, சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்தாலும், முக்கியமான கோப்புகளை, பா.ஜ.,வை சேர்ந்த துணை முதல்வர் பட்னவிஸ் தான் பார்க்கிறார். இதெல்லாம் சேர்ந்து பா.ஜ., மீது வெகுஜன கசப்பை உருவாக்கியுள்ளது.

'தேசியவாத காங்கிரஸ், சிவசேனா உடைப்பால் எங்களுக்குப் பெரிய லாபம் இல்லை. இரண்டு தேர்தல்களில் வெற்றியை அள்ளிக் கொடுத்த மாநிலம். இப்போது கடுமையான போட்டி இங்கே உருவாகியிருக்கிறது' என்று, உள்ளூர் பா.ஜ.,வினர் கூறுகின்றனர்.

ஜார்க்கண்ட்



ஜார்க்கண்டில், பா.ஜ., - -ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தான் மாறி மாறி ஆட்சி செய்கின்றன. தற்போது, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கையில் ஆட்சி இருக்கிறது. பா.ஜ., மாநில தலைவராக முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி இருக்கிறார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா பழங்குடி இன கட்சி; பாபுலால் மராண்டி பழங்குடி இனத்தவர்.

மாநில ஆட்சி மாறி மாறி வந்தாலும், கடந்த இரண்டு லோக்சபா தேர்தல்களிலும் பா.ஜ.,வுக்கே பெருவாரியாக மக்கள் வாக்களித்தனர்.

இருப்பினும், தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், முதல்வர் ஹேமந்த் சோரன், கடந்த ஜனவரி 31 அன்று, நில ஊழல் வழக்கில், அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். இது, இங்குள்ள பெருவாரியான பழங்குடி மக்கள் இடையே எதிர்ப்பை கிளப்பி உள்ளது. 'ஒரு பழங்குடி சமூக தலைவரை முதல்வர் பதவியில் இருந்து காலி செய்துவிட்டனர். ஒரு பழங்குடி - ஹேமந்த் சோரனை, இன்னொரு பழங்குடி - பாபுலால் மராண்டியை வைத்துத் தீர்க்கப் பார்க்கின்றனர்' என்ற கருத்து பரவலாக கேட்கிறது.

தமிழ்நாடு



இதுவரை தமிழ்நாட்டில் பா.ஜ.,வுக்கு பெரிய இடம் இல்லாமல் இருந்தது. இந்தத் தேர்தலிலும் ஓட்டு வங்கி அதிகரிக்குமே தவிர, வெற்றி உத்தரவாதம் இல்லை என்கின்றனர். இங்கே பா.ஜ.,வின் பெரிய ஆதரவு தளம், பிராமணர் சமூகம். அதிகாரத்தில் கட்சி இல்லாத இடத்தில் இத்தனை காலமாக பிடித்து நிறுத்தி வைத்திருப்பதில் இவர்களின் பங்கு முக்கியமானது.

இந்த முறை ஒரு பிராமணருக்கு கூட கட்சி வாய்ப்பளிக்கவில்லை என்பது, கட்சிக்கு காலங்காலமாக வாக்களிப்போர் மத்தியில் விவாதத்தை உருவாக்கி இருக்கிறது.

'இல.கணேசன், மைத்ரேயன், ஹெச்.ராஜா, நிர்மலா சீதாராமன் என்று பிராமண சமூகத்தை சேர்ந்த எல்லா தலைவர்களுமே படிப்படியாக திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டு விட்டனர். எல்லா சமூகங்களுக்கும் பா.ஜ., இடம் கொடுத்துள்ளது. ஆனால், யார் நின்றாலும் வெற்றி நிச்சயம் இல்லை என்ற சூழல் உள்ள தொகுதியை கூட எங்கள் சமூகத்துக்கு ஒதுக்கவில்லை என்றால், என்ன அர்த்தம்?' என்று கேட்டார் ஒரு தலைவர்.

அதேபோல், ஆர்.எஸ்.எஸ்., பின்புலம் உள்ள கட்சிக்காக காலங்காலமாக பாடுபடும் தலைவர்களும் ஒதுக்கப்படுகின்றனர். சமீபத்தில், 'தடா' பெரியசாமி விலகியது, அதற்கு ஒரு உதாரணம் என்கின்றனர் பா.ஜ.,வினர்.

பீஹார்



பீஹார் பா.ஜ.,வின் மூத்த தலைவர் சுஷில் மோடிக்கு, புதிய கூட்டணி வரவான ஐக்கிய ஜனதாதளம் மற்றும் அக்கட்சித் தலைவர் நிதிஷ் குமார் செயல்பாடுகள் முழுதும் பிடிக்கவில்லை. அதனால், தன்னுடைய எதிர்ப்பை கட்சித் தலைமை வரை பதிவு செய்திருக்கிறார். அதேபோல, மத்திய அமைச்சரும் பீஹாரியுமான கிரிராஜ் சிங்குக்கு, பா.ஜ., தலைமை எடுக்கத் தயாராகும் ஒரு முடிவு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

பீஹாரின் முகம் அறிந்த ரவுடியாக வலம் வந்த பப்பு யாதவ், தற்போது சுயேச்சையாக லோக்சபா தேர்தலில் களம் இறங்கி உள்ளார். அவர் மீது பா.ஜ., தலைமைக்கு திடீர் ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அவரை பா.ஜ., பக்கம் திருப்புவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கிரிராஜ் சிங் அதிருப்திக்கான காரணம் இதுதான். இந்த விஷயத்தில் பா.ஜ., தலைமையை கடுமையாக எதிர்க்கிறார் கிரிராஜ் சிங்.

இப்படிப்பட்ட பிரச்னைகள் வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு பீஹாரில் கடும் பின்னடைவை ஏற்படுத்தும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தகவல் போனது. அதையடுத்து, அப்பிரச்னையை தீர்க்க களம் இறங்கி இருக்கிறார் அவர். அதனாலேயே லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வருவதாக இருந்த அமித் ஷா, தன்னுடைய பயணத்தை திடீரென ரத்து செய்து விட்டார்.


இப்படி பல மாநிலங்களிலும் பா.ஜ.,வில் சுயமாக வளர்ந்து நிற்கும் தனிப்பட்ட தலைவர்களை அக்கட்சி தலைமை விரும்பவில்லை. இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சிக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள். இதை பா.ஜ., வியூகமாகக் கருதி செயல்படுத்துவதுதான், இப்போது பல மாநிலங்களிலும் அக்கட்சிக்கு முட்களாக விசுவரூபம் எடுத்துள்ளன. ஒரு காலத்தில் இந்தப் பாதையைத்தான் தேர்ந்தெடுத்து செய்தது காங்., அக்கட்சிக்கு காலப் போக்கில் சறுக்கல் ஏற்பட்டது. அதை உணர்ந்து பா.ஜ., தலைமை செயல்பட வேண்டும் என, பா.ஜ.,வுக்குள் பலமான குரல்கள் ஒலிக்கத் துவங்கி உள்ளது.
-- ஜனவாகன் -கட்டுரையாளர், சுயாதீன பத்திரிகையாளர்



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)