தாமரையா; தனிச் சின்னமா? குழப்பத்தில் பன்னீர்செல்வம்
இரட்டை இலை சின்னத்துக்காக போராட்டத்தை தொடர்வதா அல்லது பா.ஜ., தலைமை கூறுவதை கேட்டு, அக்கட்சி சின்னத்தில் போட்டி யிடுவதா என முடிவெடுக்க முடியாமல், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் திணறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம், தான் நீக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரி, நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அவர் கட்சி பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, பழனிசாமி தரப்பில் தொடர்ந்த வழக்கில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பன்னீர்செல்வம், 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு' என்ற அமைப்பை ஏற்படுத்தி, தனி அணியாகச் செயல்பட்டு வருகிறார். லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் இணைந்து போட்டியிடமுடிவெடுத்துள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், இரட்டை இலை சின்னத்தை, தான் அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு ஒதுக்கக் கோரி தேர்தல் கமிஷனை அணுகுவது; இரட்டை இலை கிடைத்தால், அதில் போட்டியிடுவது; பழனிசாமியும், தானும் கேட்கும்போது, சின்னத்தை முடக்குவது என பல விஷயங்களை கணக்கிட்டு, பன்னீர்செல்வம் அரசியலில் காய் நகர்த்தி வருகிறார்.
ஒருவேளை இருதரப்பும் ஒரே சின்னத்தை கேட்கும்போது, இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் தனக்கு வழங்கினால், அதில் போட்டியிடலாம் என்பதும் பன்னீர்செல்வத்தின் திட்டம்.
கடந்த சில தினங்களாக, பா.ஜ.,வுடன் பன்னீர்செல்வம் தரப்பினர் நடத்திய கூட்டணி பேச்சு இறுதியில், பன்னீர்செல்வம் தரப்பு குறைந்தது நான்கு தொகுதிகளை வழங்க வலியுறுத்தியது.
பா.ஜ., தரப்பில், 'எங்கள் கட்சியின் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக இருந்தால், நான்கு தொகுதிகள்; சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவதாக இருந்தால், இரண்டு தொகுதிகள்' என தெரிவித்துள்ளனர்.
'சுயேச்சை சின்னத்தில் உங்கள் வேட்பாளர்கள் களமிறங்கி, வெற்றி பெறுவது கடினம்; தாமரை சின்னத்தில் போட்டியிட்டால், வெற்றி பெறலாம்' என, பா.ஜ., தரப்பில் தெரிவித்துள்ளனர்.
பன்னீர்செல்வம் ஆதரவாளர்களோ, 'வேறு கட்சியில் இணைய இவ்வளவு சட்டப் போராட்டம் நடத்தவில்லை. அ.தி.மு.க., மீண்டும் நம் வசம் வர வேண்டும். எனவே, இரட்டை இலை கேட்டு, தேர்தல் கமிஷனை அணுகுவது தான் சரியாக இருக்கும். இரட்டை இலை கிடைத்தால் அதில் போட்டி; இல்லையெனில், சுயேச்சை சின்னத்தில் போட்டி என்பதில் உறுதியாக இருங்கள்' என, பன்னீர்செல்வத்திடம் தெரிவித்துள்ளனர்.
இதனால், பன்னீர்செல்வத்துக்கு தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வாசகர் கருத்து