பானை சின்னம் கிடைக்குமா? கடும் குழப்பத்தில் சிறுத்தைகள்
சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 லோக்சபா தொகுதிகளில், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து வி.சி.,க்கள் போட்டியிடுகின்றனர். கட்சியின் தலைவர் திருமாவளவன் சிதம்பரத்திலும், பொதுச்செயலர் ரவிக்குமார் விழுப்புரத்திலும் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறுவதற்காக 2 பேரும் பானை சின்னத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்து, லோக்சபா தேர்தலில் பொது சின்னமாக பானை சின்னத்தை ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் வி.சி.,க்கள் மனு அளித்தனர்.
இதற்கு, கடந்த 2 பொதுத் தேர்தல்களில் குறைந்தபட்சம் 1 சதவீதத்துக்கும் குறையாமல் ஓட்டுகளைப் பெற்றிருந்தால் மட்டுமே பொது சின்னம் கோர முடியும். எனவே, பொது சின்னமாக பானை சின்னம் வழங்க இயலாது என்று தேர்தல் ஆணையம் வி.சி.,க்கு கடிதம் அனுப்பியது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 2014 மற்றும் 2019 பொதுத் தேர்தல்களில் முறையே 1.51 சதவீதம் மற்றும் 1.18 சதவீத ஓட்டுகள் பெற்றதாகக் கூறி, தங்களுக்கே பானை சின்னம் வழங்க வேண்டும் என வி.சி.,க்கள் வழக்கு தொடர்ந்தனர்.
பொது சின்னம் கோரும் விண்ணப்பத்துடன், கட்சியின் நிதியாண்டு கணக்கை தாக்கல் செய்யவில்லை என காரணம் கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது. அதை உச்ச நீதிமன்றத்திலும் தெரிவித்தது.
இன்று வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வி.சி.,க்களுக்கு பானை சின்னம் கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளதாக கட்சியினர் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
ஆனாலும், வி.சி., வேட்பாளர்கள் நிச்சயமாக பானை சின்னத்தில் தான் போட்டியிடுவர் என்று பேட்டியளித்த திருமாவளவன், விழுப்புரம் மற்றும் சிதம்பரம் லோக்சபா தொகுதிகளில், நேற்று வரை பானையை காட்டி ஓட்டு கேட்டார்.
வி.சி., தேர்தல் பொறுப்பாளர்களிடம் கேட்டபோது, ''கட்சி 2006ல் பதிவு செய்யப்பட்டது. கட்சிக்கு தற்போது 4 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இரு எம்.பி.,க்கள் உள்ளனர். ஒரு சதவீதத்துக்கும் கூடுதலாக ஓட்டு பெற்றுள்ளோம்.
இதனால், பானை சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கக் கூடாது. ஒருவேளை வேறு யாரும் கேட்டாலும், பதிவு செய்யப்பட்ட கட்சியான வி.சி.,க்கு தான் ஒதுக்க வேண்டும்.
மாவட்ட தேர்தல் அதிகாரிதான், சின்னம் குறித்து முடிவெடுப்பார். சட்ட விதிகளின்படி, எங்களுக்குத்தான் பானை சின்னம் ஒதுக்க வேண்டும். வேட்புமனு வாபஸ் பெற 30ம் தேதி கடைசி நாள் என்பதால், அன்றைய தினம் நல்லதே நடக்கும்'' என்றார் .
வாசகர் கருத்து