இரட்டை இலை கேட்டு பன்னீர்செல்வம் மனு: தேர்தல் கமிஷன் முடிவுக்கு காத்திருப்பு

'இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தேர்தல் கமிஷனில் மனு அளித்துள்ளார். இதனால், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில், தேர்தல் கமிஷன் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு' ஏற்படுத்தி, தனி அணியாக செயல்பட்டு வருகிறார். தன்னை கட்சியிலிருந்து நீக்கியது செல்லாது என அவர் தொடர்ந்த வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அவர் அ.தி.மு.க., கொடி, சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என பழனிசாமி தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், இன்று தீர்ப்பு வர உள்ளது.
இந்த சூழ்நிலையில், அ.தி.மு.க., ஆதரவாளரான புகழேந்தி, தேர்தல் கமிஷனில் தான் அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடும்படி டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
விசாரணை முடிவில், புகழேந்தியிடம் புதிதாக தேர்தல் கமிஷனிடம் மனு அளிக்கும்படியும், அந்த மனுவை சட்டப்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் கமிஷனுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.
அதைத் தொடர்ந்து, பன்னீர்செல்வம் தரப்பில் புகழேந்தி, நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு வழங்கக் கோரி, தேர்தல் கமிஷனில் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், 'அ.தி.மு.க.,வில் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல், 2021ல் நடத்தப்பட்டது. பதவி காலம் 2026 வரை உள்ளது. இதற்கிடையில், பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள், சட்ட விரோத பொதுக்குழுவை கூட்டி, பல்வேறு சட்ட விரோத தீர்மானங்களை நிறைவேற்றி, அவர் பொதுச்செயலராகி உள்ளார்.
'இது தொடர்பான சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், இரட்டை இலை சின்னம் பெறுவதை இழக்க நேரிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, தேர்தல் கமிஷன் தலையிட்டு, எங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்க வேண்டும். நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், படிவம் 'ஏ' மற்றும் 'பி'யில் கையெழுத்திடும் அதிகாரத்தை எங்களுக்கு வழங்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை தேர்தல் கமிஷன் விரைவில் பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மனு மீது தேர்தல் கமிஷன் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு, அ.தி.மு.க.,வினரிடம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து புகழேந்தி கூறியதாவது:
இரண்டு அணியாகச் செயல்படுவதாக தேர்தல் கமிஷன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், புதிய மனு கொடுத்தால் பரிசீலிப்பதாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, புதிய மனுவை அளிக்கவும், அதை பரிசீலிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதை ஏற்று தேர்தல் கமிஷனில் புதிதாக மனு கொடுத்துள்ளோம். தேர்தல் கமிஷன் என்ன முடிவு எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தேர்தல் கமிஷன் எங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை கொடுக்காவிட்டால், முடக்கப்படும் சூழ்நிலை ஏற்படும். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல; பழனிசாமி தான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து