அண்ணாமலை 'அப்ஸ்காண்ட்' ஏன்?

சென்னையில் தமிழக பா.ஜ, தலைவர் அண்ணாமலை, பா.ம.க., தலைவர் அன்புமணி, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் ஆகியோர் நேற்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு மணி நேரம் வரை நடந்த இந்த பேச்சில், பா.ஜ., கூட்டணியில் இடம் பெற அன்புமணியின் எதிர்பார்ப்பு மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தினகரனின் விருப்பம் தொடர்பாக அண்ணாமலை ஆலோசனை நடத்தியதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
சென்னை அடையாறில் நேற்று காலை நடந்த நுால் வெளியீட்டு நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்றார். அவர், மாலை எழும்பூரில் நடக்கும் இப்தார் விருந்தில் பங்கேற்பதாக இருந்தார். இதனால், நுால் வெளியீட்டு நிகழ்ச்சி முடிந்ததும் கமலாலயம் செல்வதாகவும், அங்கு வருமாறு கட்சி நிர்வாகிகளிடமும், செய்தியாளர்களிடமும் கூறி அண்ணாமலை புறப்பட்டார்.
ஆனால், நீண்ட நேரமாக கமலாலயம் வரவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது அண்ணாமலை, பனையூர் அருகில் உள்ள அவரின் வீட்டிற்கு சென்றிருப்பதாகவும், பிற்பகல் கமலாலயம் திரும்புவார் என்றும் தகவல் கிடைத்தது.
மதியம் 1:50 மணிக்கு அண்ணாமலைக்கு பாதுகாப்பு அளிக்கும் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் கார்களில் கமலாலயம் வந்தனர்; அவர்களோடு அண்ணாமலைவரவில்லை.
பாதுகாவலர்களை தவிர்த்து விட்டு அண்ணாமலை எங்கே சென்றார் என்ற விபரம் தெரிய வந்திருக்கிறது.
பிரதமர் மோடி, 18ல் கோவை வருகிறார். அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில், கூட்டணி கட்சித் தலைவர்களை மோடியுடன் மேடையேற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்காக, கூட்டணியில் இணையவிருக்கும் தலைவர்களான அன்புமணி, தினகரன் ஆகியோரை, மயிலாப்பூரில் இருக்கும் முக்கிய பிரமுகர் வீட்டில் சந்தித்துப் பேசியுள்ளார் அண்ணாமலை. தொகுதி பங்கீடு, பா.ம.க.,வின் எதிர்பார்ப்புகள் தொடர்பாக பேசப்பட்டுள்ளது.
இவ்வாறு அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
வாசகர் கருத்து