'இனியும் தொகுதிகளை தாரை வார்க்காதீங்க!': ஸ்டாலினிடம் மன்றாடிய உடன்பிறப்புகள்

லோக்சபா தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம், சென்னை அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். அதில், கூட்டணிக் கட்சிகளிடம் தொகுதிகளை கொடுக்க வேண்டாம் என கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

கோவையில்...



கோவையில் இருந்து, நேர்காணலில் 21 பேர் பங்கேற்றனர். அவர்களிடம், ஜாதி, கட்சியில் பொறுப்பு, தற்போது என்ன தொழில் என்பது பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன.

நேர்காணலில் பங்கேற்ற சிலர் கூறியதாவது:

இம்முறையும் கூட்டணி கட்சிக்கு தொகுதியை தாரை வார்க்கக் கூடாது என்பதை முதல்வரிடம் வலியுறுத்தினோம். 'உதயசூரியன் நிற்க வேண்டுமென நினைக்கிறீர்களா அல்லது வேறு யாருக்கும் கொடுக்கலாம்னு நினைக்கிறீர்களா?' என ஸ்டாலின் கேட்டார்.

'கோவையில் உதயசூரியன் தான் போட்டியிட வேண்டும். நாம் போட்டியிட்டு ரொம்ப நாட்களாகி விட்டது. நம் கட்சிக்காரர்கள் யாருக்கு வேண்டுமானாலும் 'சீட்' கொடுங்கள்; இல்லையெனில், கட்சியை வளர்க்க முடியாது; காணாமல் போய் விடுவோம். தொகுதியை கைப்பற்ற பா.ஜ., களமிறங்கியுள்ளது. அதனால், தி.மு.க., கண்டிப்பாக போட்டியிட வேண்டும்' என கூறினோம். 'கூட்டணி கட்சியினரிடம் பேசுகிறேன்' என முதல்வர் கூறினார்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

கிருஷ்ணகிரியில்..



கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட, 25 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். அத்தொகுதியை மீண்டும் கேட்டு காங்., - எம்பி., செல்லக்குமார் அழுத்தம் கொடுத்து வருகிறார்.

நேர்காணலில் பங்கேற்ற கிருஷ்ணகிரி தி.மு.க., பிரமுகர் கூறியதாவது:

நாங்கள் ஒட்டுமொத்தமாக, 'தி.மு.க.,வுக்கு தொகுதியை ஒதுக்குங்கள்; வென்று காட்டுகிறோம்' என்றோம். முதல்வர் ஸ்டாலின் கோபமடைந்து, 'கட்சி சொல்வதை கேளுங்கள்' என, ஒற்றை வரியுடன் முடித்துக்கொண்டார்.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன், 'ஓ கிருஷ்ணகிரி தொகுதியா... உங்களுக்கு அறிவாலயத்தில் 'சீட்' இருக்கு; தொகுதியில் சீட் இல்லை. இங்கயாவது சீட்டை பிடிச்சு உட்காருங்க' என அவரது பாணியில் நக்கலாக கூறினார்.

இருப்பினும் நாங்கள், 'காங்.,குக்கு கிருஷ்ணகிரி தொகுதியில் அதிகபட்சம், 30,000 ஓட்டுகள் கூட இல்லை. இம்முறை தொகுதியை தி.மு.க.,வுக்கு தாருங்கள்' என கூறினோம். அதற்குப் பதிலளிக்கவில்லை. ஒவ்வொருவரின் ஜாதி, தொழிலை கேட்டு, 20 நிமிடத்தில் நேர்காணலை முடித்து அனுப்பினர். இம்முறையும் தொகுதியை காங்., கட்சியினருக்கு கொடுக்க, தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளதை, துரைமுருகன் நக்கல் பேச்சு மூலம் தெரிந்து கொண்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மதுரையில்...



இதே போல மதுரை தொகுதிக்கு நடந்த நேர்காணலில் கலந்து கொண்ட கட்சியினர், மதுரையை இம்முறையாவது தி.மு.க., போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது, 'மதுரை தொகுதி, கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டது; அக்கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுங்கள்' என்றார். அப்போது நிர்வாகிகள், கருணாநிதி காலத்தில் நடந்ததை ஒப்பிட்டு பேசியுள்ளனர். உடனே ஸ்டாலின் டென்ஷன் ஆகி, 'கருணாநிதி காலம் என்பது வேறு. தற்போது கம்ப்யூட்டர் காலம். இந்த கூட்டணியை கஷ்டப்பட்டு உருவாக்கியுள்ளேன். கூட்டணி வேண்டாம் என அனைவரும் எழுதித் தருகிறீர்களா? தேர்தல் முடிந்த பின், கூட்டணியை கத்தரிக்கோலால் வெட்டி விட்டுறுவோமா (அப்போது விரல்களை கத்தரிக்கோல் போல் சைகையில் காட்டினார்)' என டென்ஷனாகி பேசியுள்ளார்.

இப்படி பல தொகுதிகளுக்கும் நடந்த நேர்காணலில் பங்கேற்ற தி.மு.க.,வினரிடம் கோபம் காட்டியுள்ளார் ஸ்டாலின்.


Jayaraman Pichumani - Coimbatore, இந்தியா
03-ஏப்-2024 01:29 Report Abuse
Jayaraman Pichumani ஆக, இந்த அதிருப்தி வாக்குகள் எல்லாம் எதிர்க் கட்சிகளுக்கு செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது. எந்தெந்த தொகுதிகளிலெல்லாம் வாய்ப்பு மறுக்கப்பட்டது, அங்கெல்லாம் பாஜக வெல்ல வாய்ப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்