ஸ்டாலினிடம் இருப்பது அறியாமை அல்ல... வன்மம்: ராமதாஸ் கொதிப்பு

"வன்னியர் சமூகத்துக்கு இடஒதுக்கீடு கொடுத்துவிட்டு சமூக நீதி குறித்து ஸ்டாலின் பாடம் நடத்தட்டும்" என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் தி.மு.க., வேட்பாளர் மணியை ஆதரித்து, முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், "சமுகநீதி பேசும் ராமதாஸ், சமுக நீதிக்கு எதிரான பா.ஜ.,வுடன் கைகோர்த்த மர்மம் என்ன. பா.ம.க., வலியுறுத்தும் கொள்கைக்கு முற்றிலும் எதிரான கொள்கையை உடையது, பா.ஜ., சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடி, ராமதாஸுக்கு உத்தரவாதம் தந்தாரா?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மண்டல் கமிஷனின் அறிக்கையை 10 ஆண்டுகள் கிடப்பிலும், அதற்கு முந்தைய காகா கலேல்கர் கமிஷன் அறிக்கையை குப்பைத் தொட்டியிலும் போட்டு வைத்திருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசிடமிருந்தே, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை வென்றெடுத்துக் கொடுத்த இந்த ராமதாஸால், சமூகநீதியை வென்று கொடுக்க முடியும்.

தமிழகத்தில் சமூகநீதி செடிக்கு வெந்நீர் ஊற்றி அழித்து வரும் மு.க.ஸ்டாலினுக்கு இதுகுறித்த கவலை தேவையில்லை. தருமபுரியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போது, வன்னியர்கள் மீதும், சமூகநீதி குறித்தும் திடீர் அக்கறை பிறந்திருக்கிறது.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் ராமதாஸ் ஏதேனும் வாக்குறுதி பெற்றிருக்கிறாரா எனக் கேள்வி எழுப்பியவர், தமிழகத்தை ஆறாவது முறையாக ஆட்சி செய்யும் தி.மு.க.,வை வழிநடத்திச் செல்லும் ஸ்டாலினுக்கு இப்படி கேள்வி எழுப்பும் அளவுக்குத் தான் அரசியல் புரிதல் இருப்பது வருத்தமளிக்கிறது.

தமிழகத்தில் தி.மு.க., 6 முறையும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு தான் ஆட்சி அமைத்துள்ளது. அப்போதெல்லாம் கூட்டணி கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை நிறைவேற்றித் தருவோம் என்று உத்தரவாதம் அளித்ததா. 5 முறை தேசியக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மத்திய அரசில் அங்கம் வகித்தது. அந்த 5 முறையும் தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் தொடர்பாக காங்கிரசிடமிருந்தும் பா.ஜ.,விடம் இருந்தும் உத்தரவாதம் பெற்றதா?

தேர்தலுக்குப் பிறகு மத்தியில் தேசியக் கட்சி ஆட்சி அமைக்க மாநிலக் கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் போது, மாநிலக் கட்சிகள் முதன்மைக் கோரிக்கைகளை முன்வைக்கும். அவற்றை உள்ளடக்கிய குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டம் உருவாக்கப்பட்டு, அதனடிப்படையில் தான் மத்திய அரசு செயல்படும். இது தான் இயல்பு. முதலமைச்சர் அளவுக்கு உயர்ந்துவிட்ட ஸ்டாலினுக்கு இது தெரியாதது வருத்தமளிக்கிறது.

2004ல் மன்மோகன்சிங் தலைமையிலான அரசுக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்ட போது, கூட்டணி கட்சிகளின் கொள்கை சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டம் உருவாக்கப்பட்டது.

மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வி.பி.சிங் ஆட்சியில் வழங்கப்பட்ட நிலையில், அதை உயர்கல்வி நிறுவனங்களுக்கும் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சேர்க்க பா.ம.க. வலியுறுத்தியது. பா.ம.க. லோக்சபா உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதால் அந்தக் கோரிக்கையை பொதுச் செயல்திட்டத்தில் காங்கிரஸ் சேர்த்துக் கொண்டது.

2004ம் ஆண்டுக்கு முந்தைய சமூக நீதி வரலாற்றில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த இடமும் கிடையாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போதே, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் கண்டு அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க தனி கமிஷன் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதை காங்கிரஸ் கட்சி செய்யவில்லை.

அதைக் கண்டித்து அம்பேத்கர் பதவி விலகிய பிறகு தான் காகா கலேல்கர் தலைமையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான ஆணையத்தை நேரு அரசு அமைத்தது. ஆனால், அந்த ஆணையத்தின் அறிக்கையை செயல்படுத்தாமல் குப்பைத்தொட்டியில் வீசி எறிந்தவர் தான் அன்றைய பிரதமர் நேரு.

கலேல்கர் ஆணைய அறிக்கை 1955ல் நிராகரிக்கப்பட்ட நிலையில், அதன்பின் 1977ம் ஆண்டு வரை 22 ஆண்டுகள் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த நிலையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான இரண்டாவது ஆணையம் அமைக்கப்படவே இல்லை.

அதன்பின் 1979ம் ஆண்டு ஜனதா ஆட்சியில் அமைக்கப்பட்ட மண்டல் ஆணையம் 1980ம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சியில் அதன் அறிக்கையை தாக்கல் செய்த போதிலும், அதை காங்கிரஸ் அரசு செயல்படுத்தவில்லை. இந்திரா காந்திக்குப் பிறகு ராஜிவ் காந்தி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, மண்டல் ஆணையத்தின் அறிக்கையை 'புழுக்கள் நிறைந்த குடுவை' என்று கூறி அதைத் தொடக்கூட மறுத்தார். இவை அனைத்தும் பதியப்பட்ட வரலாறு ஆகும்.

சமூகநீதிக்கு எதிராக இத்தகைய பின்னணி கொண்ட காங்கிரஸ் தலைமையிலான அரசிடமிருந்தே மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க பா.ம.க.,வால் முடிந்தது. லோக்சபாவில் பா.ம.க.வை விட தி.மு.க.,வுக்கு அதிக வலிமை இருந்த போதிலும் சமூகநீதிக்காக துரும்பைக் கூட கிள்ளிப் போடாத இயக்கம் தான் தி.மு.க.,

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு மத்திய அரசை ஒப்புக்கொள்ளச் செய்ய பா.ம.க.வால் முடியும். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக நீதிபதி ரோகிணி ஆணையத்தை அமைத்து, அதன் அறிக்கையை பெற்ற பிரதமர் நரேந்திர மோடி, இக்கோரிக்கையை ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்.

இது ஒருபுறம் இருக்க, சமூகநீதி குறித்தெல்லாம் பேசுவதற்கு தமக்கு தகுதி இருக்கிறதா என்று மு.க.ஸ்டாலின் தனக்குத் தானே கேள்வி எழுப்பி விடை காண வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக அளித்த உத்தரவாதத்தை இரு ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றினோமா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

தமிழகத்தில் 3 முறை சாதிவாரி வாக்கெடுப்பு நடத்தும் வாய்ப்புகளை உருவாக்கியது பா.ம.க. ஆனால், அந்த வாய்ப்புகளை கலைத்து வீணடித்தது திமுக அரசு தான். சமூகநீதிக்கு எதிராக இத்தனை துரோகங்களை செய்து விட்டு, சமூகநீதி குறித்தெல்லாம் தி.மு.க., பேசுவது முரண்பாட்டின் உச்சமாகும்.

இந்தியாவின் 6 மாநிலங்களில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் அளவு 75% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் கூறுகின்றன.

மத்திய அரசு தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என ஸ்டாலின் மீண்டும், மீண்டும் கூறுவதற்கு காரணம் அவரது அறியாமை அல்ல. தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் வன்னியர் உள்ளிட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு விடக் கூடாது என்ற வன்மம் தான் காரணம். இதை ஸ்டாலினின் மனசாட்சி ஒப்புக்கொள்ளும்.

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இன்றுடன் 2 ஆண்டுகள் முடிகின்றன. தமிழக அரசு நினைத்திருந்தால் வன்னியர்களின் கல்வி, வேலைவாய்ப்பு நிலை குறித்த தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கியிருக்க முடியும்.

இதற்காக ஸ்டாலினை நானே நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். எட்டு முறை அவருக்கு கடிதம் எழுதினேன். ஆனால், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதில் ஒரு துளி கூட முன்னேற்றம் ஏற்படவில்லை.

ஸ்டாலின் நினைத்திருந்தால் வன்னியர்களுக்கு எப்போதோ இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். ஆனால், பிற சமூகங்களின் கோரிக்கைகளைக் கேட்டுக் கேட்டு நிறைவேற்றும் ஸ்டாலினுக்கு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மட்டும் மனம் வரவில்லை.

ஸ்டாலினுக்கு சமூகநீதியில் உண்மையாகவே அக்கறை இருந்தால் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கி விட்டு, தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி விட்டு, அதன்பிறகு சமூகநீதி பற்றி பேச வேண்டும்.

வன்னியர் சமூகத்திற்கு இழைத்த துரோகங்களுக்காக தி.மு.க.,வுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாராகி விட்டனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,, இந்தியா
31-மார்-2024 08:47 Report Abuse
NicoleThomson அகந்தையின் maru உருவம் stalin
elangovan - Chennai, இந்தியா
31-மார்-2024 07:30 Report Abuse
elangovan நெத்தி அடி... உண்மையான வன்னியன் ஸ்டாலின்கு ஓட்டு போட மாட்டான். தர்மபுரியில் வன்னியர் ஓட்டை வாங்க பொய் சொல்லும் ஸ்டாலின் இம்முறை ஏமாந்து விடுவார். மக்கள் தெளிவாக உள்ளனர். வன்னியர் பற்றி பேச ஸ்டாலின்கு எந்த தகுதியும் இல்லை
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்