பரிசு பெட்டி வழங்குவதில் பாரபட்சம்: தி.மு.க., மீது கரூரில் கடும் அதிருப்தி
கரூர் சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில் வழங்கப்படும் பரிசு பெட்டி, ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதால், மற்றவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
கரூர் மாவட்ட தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது ஆண்டு விழாவையொட்டி, மாவட்ட தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி சார்பில், கரூர் சட்டசபை தொகுதி மக்களுக்கு, மூன்று எவர்சில்வர் பாக்ஸ் உள்ள பரிசு பெட்டி கடந்த சில நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது.
தி.மு.க.,வினர் இரவு நேரத்தில் பரிசு பெட்டியை வேனில் கொண்டு சென்று, ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு மட்டும் வழங்கி வருகின்றனர்; ரேஷன் கார்டு இல்லாதோருக்கு வழங்குவதில்லை. இதனால், பரிசு பெறாதோர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இது குறித்து அதிருப்தியாளர்கள் கூறியதாவது:
புதிதாக திருமணம் ஆனவர்கள், தனிக்குடித்தனம் சென்ற பலருக்கு ரேஷன் கார்டு கேட்டு பல மாதங்கள் ஆன நிலையில், புதிய ரேஷன் கார்டுகள் தரப்படவில்லை. அதனால், அரசு வழங்கிய சலுகைகளை பெற முடியாமல் தவித்து வருகிறோம்.
இந்நிலையில், தி.மு.க.,வினர் வழங்கும் பரிசு பெட்டியும் கிடைக்கவில்லை. ரேஷன் கார்டு இல்லாத ஆயிரக்கணக்கான நபர்களுக்கு ஓட்டுரிமை உள்ளது. ஆனால், ரேஷன் கார்டு இல்லாததை காரணம் காட்டி, தி.மு.க.,வினர் பரிசு பெட்டி தர மறுக்கின்றனர். இதனால், வரும் தேர்தலின் போது தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் ஓட்டு கேட்டு வரும்போது, ரேஷன் கார்டு இல்லாத வாக்காளர்கள் சும்மா விடமாட்டார்கள்; கேள்வி கேட்பர்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.
தி.மு.க., கூட்டணியில், காங்., கட்சிக்கு 10 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த எம்.பி., தேர்தலை போல, கரூர் தொகுதி காங்., கட்சிக்கு மீண்டும் ஒதுக்கப்பட்டால், பரிசு பெட்டி விவகாரத்தால் தமக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற கலக்கத்தில் காங்.,கட்சியினர் உள்ளனர்.
வாசகர் கருத்து