3 தொகுதிகள் கேட்ட திருமாவளவன், ஸ்டாலினிடம் மடங்கியது எப்படி?
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரு தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிதம்பரத்தில் திருமாவளவன் பானை சின்னத்திலும், கட்சியின் பொதுச்செயலர் ரவிக்குமார் விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், மூன்று தொகுதிகள் ஒதுக்க வேண்டும். அதில், ஒன்று பொதுத்தொகுதியாக இருக்க வேண்டும் என்பதே திருமாவளவனின் பிரதான கோரிக்கை.
அந்த ஒரு பொதுத்தொகுதியை, பிப்., மாதம் வி.சி., கட்சியில் இணைந்த லாட்டரி மார்ட்டின் குடும்ப உறுப்பினரான ஆதவ் அர்ஜுனாவுக்கு வழங்க திருமாவளவன் திட்டமிட்டார். அத்துடன், அவருக்கு கட்சியின் துணை பொதுச்செயலர் பதவிவழங்கியும் அழகு பார்த்தார்.
ஆதரவு அறிக்கை
ஆனால், ஆதவ் அர்ஜுனாவுக்கு பதவி வழங்கியது, வி.சி., கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலருக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து, 'வேளச்சேரி தீர்மானமும், ஆதவ் அர்ஜுனா நியமனமும்' என்ற தலைப்பில், ஒரு அறிக்கையை திருமாவளவன் வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், 2008ல் தலித் அல்லாத கட்சியினரை, நம் கட்சி முழுமையான புரிதலோடு உள்வாங்கியிருக்கிறது.
ஆதவ் அர்ஜுனா நியமனத்திற்கு நமது வளர்ச்சியை விரும்பாத, கொள்கை பகை முனையத்தில் இருந்து விமர்சனங்கள் என்னும் பெயரில், ஒரு பொருட்டுமில்லாத உளறல்கள் சமூக ஊடகங்களை நிரப்பும் குப்பை கூளங்களாக வந்து குவிகின்றன; அவற்றுக்கு முகம் கொடுக்காமல் நம் கடமையை தொடர வேண்டும்' என்று குறிப்பிட்டு, கட்சியில் எழுந்த எதிர்ப்புகளை சமாளித்தார்.
தொகுதி பங்கீட்டிலும், ஆதவ் அர்ஜுனாவுக்காக மூன்று தொகுதிகளை மீண்டும், மீண்டும் கேட்போம்; அதுவரை அறிவாலயம் பக்கமே எட்டி பார்க்க மாட்டோம் என, திருமாவளவன் பிடிவாதம் பிடித்தார். இரண்டு முறை அறிவாலயத்திற்கு வருவதாக கூறிவிட்டு வராமல்,' டிமிக்கி' கொடுத்தார். தி.மு.க.,வின் தொகுதி பங்கீட்டு குழுவில் இடம் பெற்ற மூத்த அமைச்சர்கள் சிலர், திருமாவளவன் மீது அதிருப்தி அடைந்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை கழற்றி விட்டு, பா.ம.க.,வை சேர்த்து விடலாமா என்பது குறித்தும் ஆலோசித்தனர். ஆனால், முதல்வர் ஸ்டாலின் மட்டும், விடுதலை சிறுத்தைகள் 2009ம் ஆண்டு முதல் கூட்டணியில் நீடிக்கிற கட்சி; அக்கட்சியை வெளியேற விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இதற்கிடையில், அ.தி.மு.க., தரப்பில் திருமாவளவன் கேட்கும் தொகுதிகளை ஒதுக்கித்தர துாது அனுப்பி விடப்பட்டது.
ஆனாலும், தி.மு.க., கூட்டணியை விட்டு வர மாட்டேன். முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசிய பின் தொகுதி பங்கீடு தொடர்பான முடிவை எடுப்பேன் என, திருமாவளவன் உறுதியாக இருந்தார். திருமாவளவனை சந்திக்க, தலைமை செயலகத்தில்முதல்வர் ஸ்டாலின் நேரம் ஒதுக்கி தந்தார்.
இதயத்தில் இடம்
சந்திப்பின் போது, முதல்வர் ஸ்டாலின், 'உங்கள் கட்சிக்கு தனித்தொகுதிகள் ஒதுக்கியுள்ள நிலையில் பொதுத்தொகுதி எதற்கு? உங்களுக்கு ஒரு தொகுதி கூடுதலாக கொடுத்தால், மற்ற கட்சிகளும் கூடுதல் தொகுதிகள் கேட்பர். கூடுதல் தொகுதி தர மனம் உள்ளது. ஆனால், தொகுதிகள் இல்லையே... சட்டசபை தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம்' என, முதல்வர் சமாதானமாக பேசியுள்ளார்.
'ஆதவ் அர்ஜுனா எங்களுக்கு பொருளாதார ரீதியில் நிறைய உதவிகள் செய்துள்ளார்; அவருக்கு சீட் கொடுப்பதாக உறுதி அளித்து விட்டோம்' என்று திருமாவளவன் விடாப்பிடியாக சொல்ல, 'பொருளாதாரம் தான் பிரச்னை என்றால், அதை தி.மு.க., சரி செய்யும்' என்று ஸ்டாலின் சொல்லி உள்ளார். இதையடுத்து, வேறு வழியின்றி, முதல்வர் ஸ்டாலின் விருப்பத்துக்கு திருமாவளவன் சம்மதித்ததாக கட்சி வட்டாரங்கள் கூறின.
தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவில் இடம் பெற்றுள்ள மூத்த அமைச்சர் ஒருவரிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர், 'எங்களுக்கு 2 தனித்தொகுதிகளே போதும். பொதுத்தொகுதிக்கு சீட் ஒதுக்க வேண்டாம். ஆதவ் அர்ஜுனா எம்.பி.,யாகி விட்டால், அவர் மத்திய அமைச்சர் பதவி கேட்பார். அவரது அரசியல் வளர்ச்சி, எங்களை போல கட்சிக்கு நீண்ட நாட்களாக உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போய் விடும்' என்று கூறியுள்ளார்.அந்த இரண்டாம் கட்ட தலைவரின் கருத்துக்களை தி.மு.க., மேலிடத்தில் தெரிவித்து, அங்கிருந்தும் ஆதவ் அர்ஜுனாவுக்கு சீட் கிடைக்காமல் அவரை ஏமாற்றம் அடைய வைத்துள்ளனர் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
வாசகர் கருத்து