நடிகர் கமலுக்கு ராஜ்யசபா 'சீட்': ஜவாஹிருல்லாவுக்கு நெருக்கடி
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா இடம் வழங்கப்பட்டுள்ளது, தி.மு.க., கூட்டணியில் நீண்ட காலமாக உள்ள மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு, கட்சிக்குள் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2011 சட்டசபை தேர்தலில், ம.ம.க., - அ.தி.மு.க., கூட்டணியில் இரண்டு தொகுதிகளில் தனி சின்னத்தில் போட்டியிட்டு வென்றது. 2013 ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட கனிமொழிக்கு, ம.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் இருவர் ஆதரவளித்தனர். இதனால், அ.தி.மு.க., கூட்டணி முறிந்தது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் ம.ம.க., இணைந்தது. கட்சி பிளவுபட்டுள்ளதை காரணம் காட்டி தொகுதி ஒதுக்கவில்லை. ஆனாலும், பா.ஜ., வெற்றியை தடுக்க தி.மு.க.,வை ஆதரிப்பதாக அறிவித்தது. 2021 சட்டசபை தேர்தலில், ம.ம.க., சார்பில் இரண்டு பேர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றனர்.
லோக்சபா தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என, ஜவாஹிருல்லா வலியுறுத்தினார். ஆனாலும், ம.ம.க.,வுக்கு தொகுதி எதுவும் ஒதுக்காமல், தொகுதிப் பங்கீட்டை தி.மு.க., முடித்துள்ளது.
கூட்டணியில் இணைந்த உடனேயே கமலுக்கு ஒரு ராஜ்யசபா இடத்தை வழங்கியுள்ளது. ஆனால், 2013ல் நெருக்கடியான நேரத்தில் கனிமொழி ராஜ்யசபா எம்.பி.,யாக உதவிய தங்களுக்கு எதுவும் இல்லை என, சமூக வலைதளங்களில் தி.மு.க.,வை ம.ம.க.,வினர் கடுஞ்சொற்களால் தாக்கி வருகின்றனர்.
இதனால், கட்சிக்குள்ளேயே ஜவாஹிருல்லாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, 'நாளை மறுதினம் திருச்சியில் நடக்கும் கட்சியின் செயற்குழு கூட்டத்தில், நாட்டு நலன், சமுதாய நலன், கட்சி நலன் ஆகியவற்றை முன்வைத்து லோக்சபா தேர்தல் நிலைப்பாட்டை அறிவிப்போம்' என அறிவித்துள்ள ம.ம.க., தலைவர் ஜவாஹிருல்லா, தி.முக.,வை விமர்சிப்பதில் வரம்பு மீற வேண்டாம் என கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாசகர் கருத்து