தி.மு.க.,வுக்கு எதிராக திரும்பும் வியாபாரிகள் சங்கத்தினர்
கடந்த, 2019 சட்டசபை தேர்தலில் தொழில் வரி, உள்ளாட்சிகள் கட்டுப்பாட்டில் செலுத்தப்படும் வரிகள் குறைக்கப்படும். தொழில் நிறுவனங்களில் வாராந்திர முறையில் மின்சாரம் கணக்கிடப்படும் என்பது உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகள் வியாபாரிகள் நலனுக்காக தி.மு.க., சார்பில் வழங்கப்பட்டன. ஆனால், தற்போது வரை எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டிலும் வியாபாரிகள் பலனடையும்படி அறிவிப்பும் வரவில்லை. பல்வேறு பிரச்னைகளில் வியாபாரிகள் சிக்கித் தவிக்கும் நிலையிலும் தி.மு.க., அரசு வியாபாரிகள் மீது கவனம் செலுத்தவில்லை. சமீபத்தில் திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. பெரியளவில் அங்குள்ள வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நிவாரணம் கொடுக்கப்படவில்லை.
இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளில் வியாபாரிகள் புறக்கணிப்பட்டதால், அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் வியாபாரிகள் சங்கங்களும் தனித்தனியாக கூட்டம் நடத்தி லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடிவெடுத்துள்ளனர். அந்தந்த வியாபாரிகள் சங்க தலைவர்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு எந்த கட்சி ஆதரவு தருகிறதோ அவர்களுக்கு ஓட்டுபோட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, திண்டுக்கல் தொழில் வர்த்தகர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி கிருபாகரன் கூறியதாவது:
வியாபாரிகள் நலனுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உள்ளாட்சிகள் சார்பில் தற்போது தொழில், குப்பை என புதிது புதிதாக வரி வசூலிக்கின்றனர்.
வணிக வரி வசூல் அதிகம் உள்ளது. மின் கட்டணம் வாராந்திரமாக மாற்றப்படும் என்றனர். அதுவும் இதுவரை மாற்றப்படவில்லை. வணிக வரித்துறை பறக்கும் படையினர் 'ரெய்டு' என்ற பெயரில் இஷ்டத்திற்கு அபராதம் விதிக்கின்றனர். இதனால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
அரசு எங்களை கண்டுகொள்ளாததால் தி.மு.க., மீது வியாபாரிகள் அதிருப்தியில் உள்ளனர்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாசகர் கருத்து