என்னே ஒரு கடமை உணர்ச்சி! இரவோடு இரவாக பரிசு பெட்டி
சிறையில் உள்ள கரூர் எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி தேர்தல் பணியாற்றும்படி கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். அதையடுத்து கரூர் சட்டசபை தொகுதியில், இரவு நேரத்தில் வீடு வீடாக சென்று, தி.மு.க.,வினர், 'பரிசுப்பெட்டி'யை வழங்கிஉள்ளனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 100வது ஆண்டு விழாவையொட்டி கடந்தாண்டு ஜூன் மாதம், கரூர் மாவட்ட தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி சார்பில், கரூர் சட்டசபை தொகுதி மக்களுக்கு, மூன்று சில்வர் பாக்ஸ் உள்ள, 'பரிசுப்பெட்டி' வழங்க திட்டமிட்டப்பட்டது.
ஆனால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இப்போது வரை அவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை.
இந்நிலையில், சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் உத்தரவின் பேரில், நேற்று இரவு வீடு வீடாக சென்று பரிசு பெட்டிகளை, தி.மு.க.,வினர் வழங்க துவங்கினர். இன்னும் சில நாட்களில் கரூர் சட்டசபை தொகுதி முழுதும் பரிசுப் பெட்டியை வழங்கி விடுவோம் என, தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.
அந்த பரிசுப்பெட்டியில், மூன்று அளவுகளில், மூன்று சில்வர் பாக்ஸ், 'இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்' மற்றும் 2024 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் சிறப்பு அம்சங்கள் என்ற பெயரில் துண்டு பிரசுரம் ஆகியவை இருந்தன. துண்டு பிரசுரத்தில், செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ., கரூர் மாவட்ட கழகச் செயலர் என, அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், பரிசுப்பெட்டியில் செந்தில் பாலாஜி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் என அச்சிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
தி.மு.க.,வின் கரூர் மாவட்ட செயலர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதால், தேர்தல் பணி மந்த நிலையில் இருப்பதாகவும், கட்சியினர் யாரும் கட்டுப்பட்டு பணியாற்றுவதில்லை எனவும் கட்சி தலைமைக்கு புகார் சென்றது. அதையடுத்து சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட நிர்வாகிகளுக்கு தேர்தல் பணியில் தீவிரம் காட்ட உத்தரவிட்டுள்ளார்.
அதன் பின்னர் தான் கரூர் சட்டசபை தொகுதி முழுதும் பரிசுப்பெட்டி வழங்கும் பணியை, கட்சியினர் மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாசகர் கருத்து