துரோகம் செய்ததால் கிடைத்த பரிசு இது: பன்னீர்செல்வத்தை சாடிய பழனிசாமி
"நமக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வழங்க முடியாது என கர்நாடக அரசு சொல்கிறது. ஸ்டாலினுக்கு தெம்பு இருந்தால் பதில் அறிக்கையை வெளியிட்டிருக்க வேண்டும்" என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்
திருப்பூர் அ.தி.மு.க., வேட்பாளர் அருணாச்சலத்தை ஆதரித்து பழனிசாமி பேசியதாவது:
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியில் தான் தமிழகம் ஏற்றம் பெற்றது. அடித்தட்டு மக்களுக்கும் திட்டங்கள் கிடைத்தன. இவர்கள் இருவரும் இல்லையென்றால், ஏழைகள் ஏழைகளாக இருந்திருப்பார்கள்.
சிலர் தங்கள் வீட்டு மக்களுக்காக வாழ்கிறார்கள். மக்களைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை அவர்கள் விட்டில் இருப்பவர்கள் பதவிக்கு வரவேண்டும், ஆட்சி அதிகாரத்தில் மத்தியிலும் மாநிலத்திலும் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடு.
நம்மை வீழ்த்த எத்தனையோ அவதாரம் எடுத்துவிட்டார், தி.மு.க., தலைவர் ஸ்டாலின். இந்த இயக்த்தை அழிக்க ஸ்டாலின் போட்ட திட்டம் எல்லாம் தூள் தூளாகிவிட்டது.
இந்த இயக்கத்திற்கு யார் துரோகம் செய்தாலும் சிலருக்கு இப்போது கிடைத்தது தான் பரிசாக கிடைக்கும். அ.தி.மு.க.,வுக்கு துரோகம் செய்தவர்கள் தானாக அழிந்து போய்விடுவார்கள்.
விவசாயிகளின் 50 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு அவினாசி திட்டத்துக்கு அனுமதி அளித்து 1652 கோடி ரூபாயை மாநில அரசின் நிதியில் இருந்து ஒதுக்கி 85 சதவீத பணிகளை நிறைவேற்றினோம். மீதமுள்ள 15 சதவீத பணிகளை முடிக்காமல் தி.மு.க., அரசு கிடப்பில் போட்டுவிட்டது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே ஸ்டாலின் இந்த திட்டத்தை நிறுத்தி வைத்திருக்கிறார். மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.
நமக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வழங்க முடியாது என கர்நாடக அரசு சொல்கிறது. ஸ்டாலினுக்கு தெம்பு இருந்தால் பதில் அறிக்கையை வெளியிட்டிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் கையாலாகாத அரசாக தி.மு.க., இருக்கிறது.
இண்டியா கூட்டணி என்ற போர்வையில் முதல்வர் குளிர்காய்ந்து வருகிறார். கர்நாடகவில் நடந்த இண்டியா கூட்டணி கூட்டத்தில், காவிரி நீரை ஸ்டாலின் கேட்டிருந்தால் தண்ணீர் கிடைத்திருக்கும். அதை அவர் செய்யவில்லை.
டெல்டா விவசாயிகளை தவிக்கவிட்டு கூட்டணி பேச்சுக்காக ஸ்டாலின் சென்றார். விவசாயிகள் துன்பத்தில் வாடும் போது தண்ணீரை பெற்று தராத முதல்வர் நாட்டுக்கு தேவையா?
2021 சட்டசபை தேர்தலில் 520 அறிவிப்புகளை தி.மு.க., வெளியிட்டது. அதில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. மகளிர் உரிமைத்தொகைக்கு அ.தி.மு.க., அழுத்தம் தந்ததால் தான் நடைமுறைக்கு வந்தது.
தேர்தல் அறிக்கையில், எல்லா நகரப் பேருந்துகளிலும் பெண்கள் பயணிக்கலாம் என்றனர். ஆட்சிக்கு வந்த பிறகு கலர் அடித்த பஸ்சில் மட்டுமே பெண்கள் பயணிக்கலாம் என்கின்றனர்.
போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் என அனைவரும் தி.மு.க., ஆட்சியில் போராட்டம் செய்கின்றனர். இந்த ஆட்சியில் வேதனை தான் மிச்சம்.
இவ்வாறு அவர் பேசினார்
வாசகர் கருத்து