ஜனநாயகம் காப்பது கடமை!
கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த தமிழகத்தின் ஜனநாயக தேர்தல் திருவிழாவின் முத்தாய்ப்பு நாள் இன்று. ஒவ்வொரு கட்சியும் முன் வைத்த கொள்கைகளை பார்த்தீர்கள். வேட்பாளர்களை கண்டீர்கள். பிரசார கூச்சல்களையும் வீராவேசப் பேச்சுகளையும் கேட்டீர்கள். யார் உங்களுக்கு நெருக்கமாக இருக்கப் போகிறார்? கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து, யார் உங்கள் எதிர்காலத்துக்கும் சமூகத்துக்கும் உதவியாக இருக்க போகிறார்? எந்த அணி, நாட்டின் வளர்ச்சிக்கு அச்சாணியாக இருக்கப் போகிறது? என்பதையெல்லாம் நீங்கள் யோசித்து வைத்திருப்பீர்கள்.
இது முடிவெடுக்கும் நேரம். விரல் நுனியால் நீங்கள் அழுத்தப் போகும் பொத்தான், நாட்டின் தலையெழுத்தை மட்டுமல்ல; உங்கள் எதிர்காலத்தையும் சேர்த்தே நிர்ணயிக்கப் போகிறது.
யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பது உங்கள் உரிமை. ஆனால், ஓட்டளித்தே தீர வேண்டும் என்பது, நாடு உங்களிடம் எதிர்பார்க்கும் கடமை. இதை செய்தால் தான், ஒவ்வொரு வாக்காளரின் உரிமைகளும் நிலைநாட்டப்படும். உங்கள் உரிமையை நீங்கள் மட்டுமே பாதுகாக்க முடியும். உங்கள் மனம் சொல்லும் நபருக்கு, நீங்கள் ஓட்டளியுங்கள்.
அந்த நபர் உங்களையும், நாட்டையும் உயர்த்தக் கூடியவராக இருக்க வேண்டும் என்பதை மட்டும் மனதில் இருத்துங்கள். தவறும்பட்சத்தில் நாட்டுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் ஆபத்துதான். வாய்ப்பை தவற விட்டுவிட்டால், ஐந்தாண்டு காலமும் ஏழரைதான்.
எனவே, இத்தனை நாட்களும் நடந்த தேர்தல் திருவிழாவை கண்ட நீங்கள், இன்றைய நாளில் செய்ய வேண்டிய கடமையை தவறாமல் செய்யுங்கள். மனசாட்சியோடு நல்லவர்களுக்கு ஓட்டளித்து நாடு மற்றும் உங்கள் எதிர்காலத்தை தீர்மானியுங்கள்!
ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்!
வாசகர் கருத்து