விரக்தியில் ஆசிரியர்கள் நோட்டாவுக்கு தாவல்?
கடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க.,வுக்காக வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்த, அரசு பள்ளி ஆசிரியர்கள், தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், கடும் விரக்தியில் உள்ளனர். அதனால், நோட்டாவுக்கு ஓட்டுகள் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
கடந்த, 2019, 2020ம் ஆண்டுகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தினர். ஆனால் அப்போதைய அ.தி.மு.க., அரசு ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்' என உறுதியளித்தார். ஆனால் இன்றுவரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
இதனால், தி.மு.க., ஆட்சிக்கு வர வேண்டும் என, 2021ல் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்த அரசு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கடும் விரக்தியில் உள்ளனர்.
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
கடந்த அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் நாங்கள் போராட்டம் நடத்தியபோது, 'ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்கும் ஆசிரியர்களுக்கு, அவை போதவில்லையாம்' என மக்களிடம் அவப்பெயர் உருவாக்கும் வகையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் ஏளனமாகப் பேசினர். அப்போது அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்த ஸ்டாலினை நம்பி, ஒவ்வொரு அரசு பள்ளி ஆசிரியரும், அவர்களது குடும்ப ஓட்டு மட்டுமின்றி, குறைந்தது, 20 ஓட்டுகளாவது, தி.மு.க.,வுக்கு பெற்றுத்தந்தனர்.
ஆனால், வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விட்டது மட்டுமின்றி, ஆதார் முகாம், ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், உயர்கல்வி வழிகாட்டி, வங்கி கணக்கு என பல மடங்கு பணிச்சுமையை ஆசிரியர்களுக்கு சுமத்தி வருகிறது அரசு. அதுமட்டுமின்றி, கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட சலுகைகளையும் நிரந்தரமாக நிறுத்தி விட்டது தி.மு.க.,. இதனால் ஆசிரியர்கள் அனைவரும், தி.மு.க., மீது கடும் வெறுப்பில் உள்ளனர். தி.மு.க., - அ.தி.மு.க., அல்லாத நோட்டாவுக்கு ஓட்டளிக்க முடிவெடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து