காஸ் சிலிண்டர் விலை குறைப்பு, அரசியல் நாடகம்: சுப்ரியா சுலே

"தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால், எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு என்பது முற்றிலும் தேர்தல் நாடகம்" என, தேசியவாத காங்., எம்.பி., சுப்ரியா சுலே தெரிவித்தார்.
லோக்சபா தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால், கூட்டணி உடன்பாடு, தொகுதிப் பங்கீடு என, அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், மகளிர் தினத்தை ஒட்டி எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாய் குறைக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பிரதமரின் இந்த அறிவிப்பு இல்லத்தரசிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்தலுக்காக விலை குறைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இது குறித்து, தேசியவாத காங்., எம்.பி., சுப்ரியா சுலே கூறியதாவது:
லோக்சபா தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பிரதமர் மோடி எரிவாயு சிலிண்டரின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளார். பா.ஜ., ஆட்சிக்கு வந்தவுடன் இதை செய்து இருக்கலாம். ஏன் அவர் செய்யவில்லை?
ஒன்பது ஆண்டுகளாக குறைக்கப்படாத சிலிண்டர் விலையை, இப்போது குறைத்து உள்ளனர். மோடி அறிவித்திருக்கும் இந்த விலை குறைப்பால் எவ்வித மாற்றமும் ஏற்படப் போவதில்லை.
லோக்சபா தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால், எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு போன்ற அறிவிப்புகள் வெளியாகிறது, இவை முற்றிலும் தேர்தல் நாடகம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து