தமிழகத்தில் ராகுல் முடித்துவிட்ட 7 காங்., தலைவர்களின் அரசியல்
இந்த தேர்தலோடு, தமிழக காங்கிரசில் ஏழு மூத்த தலைவர்களுடைய அரசியலை ராகுல் முடித்து விட்டிருக்கிறார்.
கட்சியைத் துடிப்பாக வைத்துக்கொள்ள ஏதுவாக, 75 வயதோடு ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்ற நடைமுறையை பா.ஜ., கொண்டு வந்திருக்கிறது. அரிய விதிவிலக்காகவே இந்த நடைமுறையை அது மீறுகிறது.
காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சிகளிலும் இதே நடைமுறையை கொண்டுவர வேண்டும் என்று இளைய தலைமுறையினர் வலியுறுத்துகின்றனர். காங்கிரசை பொறுத்தளவில், 65 வயதில் தாமாக முன்வந்து அடுத்த தலைமுறையினருக்கு வழிவிடும் நடைமுறையை மூத்த தலைவர்கள் பின்பற்ற வேண்டும் என்று ராகுல் யோசனை கூறினார்.
முதல் பரிசோதனை
இது குறித்து கடந்த 2022ல் நடந்த உதய்பூர் வியூக மாநாட்டில் கட்சி விவாதித்தாலும், அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை. கட்சியின் அப்போதைய தலைவர் சோனியா, அடுத்த தலைவர் கார்கே இருவருமே, 75 வயதை கடந்தவர்கள் என்பதும் இதற்கு ஒரு காரணம். ஆனால், 2024 தேர்தல் வேட்பாளர் தேர்வில், வயதையும் முக்கிய காரணியாக காங்கிரஸ் எடுத்து பரிசீலித்திருக்கிறது.
கட்சியின் வெற்றி வாய்ப்பு, இந்த முடிவால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்ற சூழல் நிலவும் இடங்களில் எல்லாம் காங்கிரஸ் இதை முயற்சித்துள்ளது. தமிழகம் இதற்கு முதல் பரிசோதனைக் களம்.
தி.மு.க., கூட்டணியில் புதுவையோடு சேர்த்து இம்முறை, 10 தொகுதிகளை காங்கிரஸ் வாங்கியது. வலுவான கூட்டணி என்பதால், வெற்றி வாய்ப்பு அதிகம் என்று மூத்த தலைவர்கள் எல்லாருமே இம்முறை மல்லுக்கு நின்றனர். இவர்களில், 75 வயதை நெருங்கும் மூத்த தலைவர்கள் எல்லாருக்குமே வாய்ப்பு மறுத்துவிட்டது காங்கிரஸ் தலைமை.
மணிசங்கர் அய்யர், 82; சுதர்சன நாச்சியப்பன், 77; திருநாவுக்கரசர், 75; கே.வி.தங்கபாலு, 74; ஜெயகுமார், 74; பீட்டர் அல்போன்ஸ், 73; கே.எஸ்.அழகிரி, 72.
இவர்களில் ராஜிவின் நண்பர் என்பதோடு, சோனியாவின் விசுவாசி என்று பெயர் எடுத்தவர் மணிசங்கர் அய்யர். மயிலாடுதுறை தொகுதி கேட்டு கடைசி வரை போராடிய இவருக்காக சோனியாவே பேசியும் ராகுல் மறுத்துவிட்டார்.
திருநாவுக்கரசர், அழகிரி இருவரும் ராகுலின் மனதுக்கு நெருக்கமானவர்கள். சென்ற முறை ராகுலே கேட்டும், 'நான் போட்டியிடவில்லை; கட்சிக்காக மாநிலம் முழுதும் பிரசாரம் செய்கிறேன்' என்று சொன்னார் அழகிரி. அப்போது, மாநிலத் தலைவராக அவர் இருந்தார். தன் தலைமையில் சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல், உள்ளாட்சி தேர்தல் மூன்றிலும் கட்சியின் வெற்றிக்கு உழைத்தவர், இம்முறை வாய்ப்பு கேட்டு நம்பியிருந்தார்.
டில்லி லாபி
மும்பை கூட்டத்துக்குச் சென்று ராகுலைச் சந்தித்ததோடு, டில்லிக்கும் வந்து முகாமிட்டிருந்தார் திருநாவுக்கரசர். இருவருக்குமே, 'முயற்சி செய்கிறேன்' என்ற வார்த்தைகளோடு முடித்துவிட்டார் ராகுல்.
சிவகங்கை தொகுதியில் இம்முறை கார்த்தி சிதம்பரத்துக்கு வாய்ப்பு அளிக்கப்படக் கூடாது என்று, காங்கிரஸ் கூட்டத்தில் சுதர்சன நாச்சியப்பன் வெளிப்படையாகவே பேசினார். 'மோடிக்கு சமமாக களத்தில் ஆளில்லை' என்று கார்த்தி ஒரு பேட்டியில் சொன்னதை, டில்லி வரை கொண்டு வந்தார்; ஒன்றும் பயனில்லை.
பீட்டர் அல்போன்ஸ் தி.மு.க., மூலமாகவும் காய்களை நகர்த்தினார். நெல்லை தொகுதியை அவரை மனதில் வைத்தே தி.மு.க., ஒதுக்கியது; பயனில்லை. தங்கபாலு, ஜெயகுமார் இருவருக்கும் கிட்டத்தட்ட கதை முன்பே தெரிந்திருந்தது என்றாலும், கடைசி வரை டில்லி லாபி மூலம் முயன்றும் பயனில்லை.
இனி வேறு கட்சிகளுக்கு சென்றும் பிரயோஜனம் இல்லை என்பதால், மிகுந்த வேதனையில் இருக்கின்றனர் இந்த தலைவர்கள். 'கடைசி நேரம் எதிர்பார்ப்பில் வைத்திருப்பதை விட்டு விட்டு, நேரில் அழைத்து ஆறுதலாக நான்கு வார்த்தைகளாவது பேசி அனுப்பி இருக்கலாம்' என்று புலம்புகின்றனர்.
'மூத்த தலைவர்கள் கட்சிக்கு கொடுத்த உழைப்புக்கு, பல மடங்கு அதிகமாகவே அறுவடை செய்துவிட்டனர். இனி கட்சிக்குத் துணையாக இருப்பதில் தான் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஆட்சியை காங்கிரஸ் பிடிக்கிறதோ, இல்லையோ, இந்த அறுவை சிகிச்சை தொடரும்!' என்கின்றனர் காங்கிரஸ் காரியாலயத்தில்!
- ஜனவாகன் -
கட்டுரையாளர், சுயாதீன பத்திரிகையாளர்
வாசகர் கருத்து