பா.ஜ., வென்றால் அரசியல் அமைப்புச் சட்டம் மாறும்: ராகுல் காந்தி ஆவேசம்
"சி.பி.ஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை வைத்து நாட்டை நடத்துவதற்கான முயற்சியில் பா.ஜ., ஈடுபட்டுள்ளது" என, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
டில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதனைக் கண்டித்து ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கண்டன போராட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார் அணி) சரத் பவார், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, பி.டி.பி. கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, அகிலேஷ் யாதவ், வி.சி., தலைவர் திருமாவளவன், தி.மு.க., எம்.பி., திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பேரணியில் பேசிய கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, "எனது கணவரை சிறையில் அடைத்துள்ளனர். அவர் உண்மையான தேசபக்தர். அவர் சிறையில் இருப்பதால் ராஜினாமா செய்ய வேண்டுமென பா.ஜ.,வினர் கூறுகின்றனர். அவர் மிக நேர்மையானவர்" எனக் கூறிவிட்டு, கெஜ்ரிவால் எழுதிய கடிதத்தை வாசித்தார்.
அந்தக் கடிதத்தில், 'உங்களிடம் நான் ஓட்டு கேட்கவில்லை. 140 கோடி இந்தியர்களும் இணைந்து புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். பல்லாயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் உள்ளது, நமது நாடு. சிறையில் இருந்தாலும் எப்போதும் பாரத மாதாவை நினைத்துக் கொண்டிருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
எங்களின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கிவிட்டனர். தேர்தல் நேரத்தில் சுவரொட்டி அச்சடிப்பது முதல் பல்வேறு வேலைகள் உள்ளன. ஆனால், பணத்தை எடுக்க முடியாத அளவுக்கு செய்துவிட்டனர்.
சி.பி.ஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை வைத்து நாட்டை நடத்துவதற்கான முயற்சியில் பா.ஜ., ஈடுபட்டுள்ளது. என்னை தேர்தலில் போட்டியிட வைக்க முடியாமல் தடுக்கவும் பா.ஜ., சதிவேலையை செய்து வருகிறது.
காங்கிரசின் வங்கிக் கணக்கு முடக்கம்,. முதல்வர்கள் கைது என ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் பா.ஜ., ஈடுபடுகிறது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இல்லாமல் 180 இடங்களில் கூட பா.ஜ., வெல்ல முடியாது.
தேர்தல் முடிவுகளுக்குப் பின், அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு பா.ஜ., முயற்சி செய்யும். அவ்வாறு செய்தால், நாடு தீப்பற்றி எரியக் கூடிய சூழல் உருவாகும். அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதற்கு மக்கள் இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து